ஜெயலலிதா.. இந்தியாவின் முக்கிய பெண் ஆளுமை... பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், எம்.ஜி.ஆர் என பல பெயர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. இப்படி, ஆண்களுக்கான களமாக இருந்த அரசியலில் ஒரு பெண் ஆளுமையின் பெயர் ஒலித்தது என்றால் அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் தான்.
ஜெ.வின் அரசியல் பயணத்தை அரசியல் வேட்கை, மொழி அறிவு, போராட்ட களங்கள் மெருகேற்றினாலும், அவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க காரணமாக அமைந்தது அவர் அறிவித்த திட்டங்கள் தான். அதிலும் இவர் அறிவித்த பெரும்பாலான திட்டங்கள், இலவச திட்டங்களாகவோ அல்லது அதிக மானியம் கொண்ட திட்டங்களாகவோ இருந்துள்ளன என்பதே இதன் சிறப்பு. ஆனால், இந்த இலவச திட்டங்களை ’இலவசம்’ என கூற விரும்பாதவர் ஜெ. .. அதனால், இலவசங்களை ‘விலையில்லா திட்டம்’ என மரியாதைக்குரிய வகையில் குறிப்பிட்டு மக்கள் மனதில் இன்னும் ஒரு படி மேல் சென்றார்.
1991ம் ஆண்டில் தான் முதன்முதலாக முதலமைச்சரானார் ஜெயலலிதா, அப்போது அவர் பதவியேற்ற உடனேயே ‘தொட்டில் குழந்தை திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்தார். குழந்தையை பெற்று வளர்க்க முடியாதவர் அரசு தொட்டிலில் போட்டுவிட்டால் அந்த குழந்தையை அரசே வளர்த்துக்கொள்ளும் திட்டமே இது. அன்றைய காலக்கட்டத்தில் தலைதூக்கி இருந்த பெண் சிசுக்கொலையை ஒழிக்கவே இத்திட்டத்தை கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்த 1992ல் தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடங்கிவைத்தார் ஜெயலலிதா. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையமானது முதன்முதலில் சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் துவக்கப்பட்டது. அதில் ஒரு காவல் ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள், ஆறு தலைமைக் காவலர்கள், 24 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மகளிர் காவல் நிலையங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பட்டப்படிப்பு அல்லது டிப்லோமோ படித்திருந்தால் அவர்களின் திருமணத்திற்கு 50,000 ரூபாய் ரொக்கமும், தாலிக்கு தேவையான 4 கிராம் தங்கத்தையும் ’தாலிக்கு தங்கம் திட்டம்’ வாயிலாக வழங்கினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. முன்னதாக 1989ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் 2009 வரை 25,000 ரூபாய் தான் வழங்கப்பட்டது. அதனை இருமடங்காக உயர்த்தி ரூ.50,000 ரொக்கமும், 4 கிராம் தங்கமும் சேர்த்து ’தாலிக்கு தங்கம் திட்டம்’ என்ற பெயரில் வழங்கினார் ஜெயலலிதா.
பெண்கள், குழந்தைகள், மருத்துவம் ஆகிய துறைகளில் மட்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் வரவில்லை. அவர் மாணவர்கள் நலன் மற்றும் அவர்களது கல்வியிலும் சிறப்பு கவனத்தை செலுத்தினார். இதன் விலைவாகவே தமிழக அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படித்து வரும் மாணவர்களுக்கு தங்களின் தொழில்நுட்ப கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ள விலையில்லா லேப்டாப் வழங்குவதாக 2011ம் ஆண்டில் அறிவித்தார் ஜெ. இவரின் இந்த முன்னெடுப்பால், ஏழ்மையில் இருந்த மாணவர்கள் கைகளிலும் தொழில்நுட்பம் தவிழ்ந்தது.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி’ வழங்கும் திட்டம். தேர்தலில் வெற்றி பெற்றபின் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் இந்த முன்னெடுப்பு இல்லத்தரசிகளின் பணி சுமையை பாதியாக குறைத்தது என்றே கூறவேண்டும். பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இந்த விலையில்லா பொருட்கள் தான் பல வீடுகளில் இயங்கி கொண்டிருக்கின்றன.
2012ம் ஆண்டில் தமிழக மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. இத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவைகளை தனியார் மருவ்துவமனைகளிலும் இலவசமாக பெற உதவியது.
பெண்கள், குழந்தைகள் நலன் மட்டுமல்லாமல், திருநங்கைகளின் வாழ்க்கை போராட்டத்தையும், அதனை பற்றிய புரிதலையும் ஜெயலலிதா கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதன் வெளிபாடாகவே 2012ம் ஆண்டில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்காக மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் மலிவான விலையில் தரமான உணவு அளிக்க வேண்டும் என திட்டமிட்ட ஜெயலலிதா 2013ம் ஆண்டில் அம்மா உணவகத்தை உருவாக்கினார். இத்திட்டத்தில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல், மலிவு விலையில் மதியம், இரவு உணவு, என வழங்கி ஏழை எளியோரின் வயிற்றை நிரப்பியதால் பெயரளவில் மட்டுமல்லாமல், மனதார இவரை ’அம்மா’ என்றே அழைத்தனர் தமிழ்நாட்டு மக்கள்.
தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படிக்கும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை 2014ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், பேருந்து வசதி அதிகம் இல்லாத மாணவர்கள் மிகவும் பயனடைந்தனர்.
நாளுக்கு நாள் மருத்து பொருட்களில் விலை அதிகரித்து வருவதை உணர்ந்த ஜெயலலிதா, 2014ம் ஆண்டில் அம்மா மருந்தகங்களை அமைத்து மலிவான விலையில் மருந்துகளை அளிக்க உத்தரவிட்டார்.
தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கும் தங்கம் என்னும் திட்டங்களை தாண்டி பெண்கள் மனதில் ஒரு திட்டம் நீங்காத இடத்தை பிடித்திருந்தது என்றால் அது அம்மா குழந்தை பராமரிப்பு பொருட்கள் திட்டம்தான். 2015ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.1000 மதிப்புள்ள 16 குழந்தை பராமரிப்பு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா சேவை மையம் என எளிய மக்களின் நம்பிக்கையாக உருவெடுத்தார் ஜெயலலிதா. இப்படி தமிழ்நாடே அம்மா அம்மா என பாசத்தோடு ஜெயலலிதாவை அழைப்பதற்கு அவர் அறிவித்த மகத்தான திட்டங்கள் ஒரு முக்கிய காரணமே!.. அப்படியான ஒரு ஆளுமை இந்த உலகை விட்டு நீங்கியிருக்கலாம், ஆனால் அவர் செயல்படுத்தி விட்டு சென்ற திட்டங்கள் இன்னும் மக்கள் மத்தியில் நின்று பேசுகின்றன.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி..மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் ஜெயலலிதா..