கார்த்திகை தீபத் திருவிழா... திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கம்..!
திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு முன்பதிவில்லா ரயில்களும் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் திருக் கார்த்திகையை முன்னிட்டு, பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணமாலை அண்ணாமலையார் கோயிலில் 2664 அடி உயரத்தில் மகர ஜோதி ஏற்றப்படுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதுமலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து மகிழ்வர்.
கடந்த வாரம் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மலைசரிவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது வரை விட்டுவிட்டு மழை பெய்து வரும் காரணத்தால், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் அன்று மலையேற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம், வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தற்போது தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம், பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் 1,982 சிறப்பு பேருந்தும், மற்ற நகரங்களில் இருந்து மீதமுள்ள சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.13, 14,15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழாவிற்கு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தாம்பரத்திலிருந்து டிச.13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (எண் 06115) பிற்பகல் 2.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (எண் 06116) நள்ளிரவு 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக இயக்கப்படும்.
திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்துக்கு டிச.13, 14, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், மாலை 6.20 மணிக்கும் சிறப்பு மெழு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமார்க்கமாக விழுப்புரத்திலிருந்து மாலை 4.40 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 இரயில்களும், திருச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு சிறப்பு இரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
What's Your Reaction?