50 Years of Rajinism: கோலிவுட்டின் தனிக்காட்டு ராஜா திரையுலகில் 50 ஆண்டுகள்!
திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்தவித பின்னணியும் இல்லாமல், சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இமயம் போல வானுயர்ந்து நிற்கும் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணம் சாத்தியமானது எப்படி.... இப்போது பார்க்கலாம்...
வழியும் தெரியாது, வழிகாட்ட துணையும் கிடையாது. ஆனாலும் குறையாத நம்பிக்கை, விடாத முயற்சி, அசாத்திய பொறுமை, இவை அனைத்துக்கும் கை மேல் பலன் கிடைக்க, அதுவே ரஜினி என்னும் மகா கலைஞன் உருவாக காரணமாக அமைந்தது. சின்ன வயதிலேயே தாய், தந்தையை இழந்த ரஜினிக்கு, பிடிவாதமும் முரட்டுத்தனமும் வலது கை, இடது கை மாதிரி. இதனால் எங்கும் நிரந்தரம் இல்லாமல் மூட்டைத் தூக்கும் தொழிலாளி, ஆபிஸ் ஃபியூன், பஸ் கண்டக்டர் என திரைக்கு வரும் முன்னே போடாத வேஷம் இல்லை.
ரஜினிக்குள் ஒரு நடிகன் இருப்பதை உணர்ந்த முதல் நபர், சூப்பர் ஸ்டாரின் நண்பர் ராஜ் பகதூர். மேடை நாடகத்தில் துரியோதனனாக தூள் கிளப்பிய ரஜினியை, திரைப்பட கல்லூரிக்கு அனுப்பி வைத்ததும் அதே ராஜ் பகதூர் தான். பகதூர் வரிசையில் ரஜினியின் நடிப்புத் திறமையை பட்டைத் தீட்டியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை அறிமுகப்படுத்திய கே பாலச்சந்தர், அடுத்தடுத்து மூன்று முடிச்சு, அவர்கள் படங்களிலும் வாய்ப்புகள் கொடுத்து, ரஜினியை வளர்த்துவிட்டார்.
அப்போது பற்றி எறியத் தொடங்கிய ரஜினிகாந்த் என்ற அதிசய நெருப்பு, இன்று எரிமலையாக வீரியம் கொண்டு திரையுலகையே திகைக்க வைக்கிறது. நடிகராக அறிமுகமான ரஜினிக்கு, ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது பைரவி படத்தில் தான். வில்லனாக ஆட்டத்தை தொடங்கிய ரஜினி, இப்படியொரு ஹீரோவாக விஸ்வரூபம் எடுக்க முடியும் என அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. காலம் கை கொடுக்க, ரஜினியின் கனவும் மெய்பட்டது.
அன்று தொடங்கிய ரஜினியின் வெற்றிப் பயணம், இன்றும் எல்லையில்லாமல் பறந்து விரிந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் சினிமாவின் வண்ணம், மேக்கிங், கதை சொல்லும் விதம் என எல்லாம் மாறியது. இவை எதுவும் கட்டுக்குள் கொண்டு வர முடியாத மாய வித்தகனாக சூப்பர் ஸ்டார் என்ற சிம்மாசனத்தில் கெத்தாக அமர்ந்தார் ரஜினிகாந்த். அதேபோல், தனது நடிப்பிலும், ஃபயரான ஸ்டைலிலும் நாளுக்கு நாள் புதுமை மட்டுமே இருந்ததே தவிர, எதுவும் எப்போதும் பழையதாக சோடை போனதே இல்லை.
நடிப்பும் ஸ்டைலும் போதுமா, “இந்த வச்சிக்கோ” என பாக்ஸ் ஆபிஸிலும் பாட்ஷாவாக வசூல் செய்து கெத்து காட்டினார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரின் படங்கள் வெளியாகும் போது, தமிழ்நாட்டுக்கே அது பண்டிகையாக மாறியதெல்லாம், நினைத்தாலே இனிக்கும் சம்பவங்கள். அதேபோல் தனது படங்கள் தோல்வியடைந்தால், உடனே தயாரிப்பாளர் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வரை, அனைவரது நஷ்டத்திற்கும் ‘அண்ணாமலை’ ஸ்டைலில் செட்டில்மெண்ட் கொடுப்பதிலும் ரஜினிக்கு நிகர் யாரும் இல்லை.
வெற்றியை தலைக்கு மேல் வைத்து கொண்டாடியதும் இல்லை, தோல்வியை நினைத்து துவண்டு விழுந்ததும் இல்லை. சூப்பர் ஸ்டார் என்ற பகட்டும் இல்லை, கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் பழைய நன்றிக் கடன்களை மறந்ததும் இல்லை. இப்படி இன்னும் பல பல இல்லைகளை கடந்து வந்ததாலே, திரையுலகில் 50 ஆண்டுகளாக எல்லையில்லாமல் மேலும் உயர உயர பறந்து கொண்டே இருக்கிறார் சூப்பர் ஸ்டார் எனும் ரஜினிகாந்த். துளியும் தலைக்கணம் இல்லா இந்த ஸ்டைல் மன்னன், இன்னும் பல எல்லைகளை கடந்து ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்வார் என்பதில், எந்த ஐயமும் இல்லை.
What's Your Reaction?