Kamal: “அப்படியெல்லாம் சொல்ல வாய் கூசுது..” மறைந்த கே பாலச்சந்தர் பிறந்தநாளில் கமல் வெளியிட்ட வீடியோ!

மறைந்த இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் 94வது பிறந்ததினம் இன்று. இதனையடுத்து திரை பிரபலங்கள் பலரும் கே பாலச்சந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தனது குருவின் நினைவாக வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளா கமல்ஹாசன்.

Jul 9, 2024 - 18:06
 0
Kamal: “அப்படியெல்லாம் சொல்ல வாய் கூசுது..”  மறைந்த கே பாலச்சந்தர் பிறந்தநாளில் கமல் வெளியிட்ட வீடியோ!
கே பாலச்சந்தர் - கமல்ஹாசன்

சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கே பாலச்சந்தர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், கடைசியாக பொய் என்ற படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களாலும் திரையுலகினராலும் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே பாலச்சந்தர், 2014ம் ஆண்டு மறைந்தார். இவரது பயிற்சிப் பட்டறையில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த பலரும் இன்று ராஜநடை போட்டு வருகின்றனர். இயக்குநர்கள் வஸந்த், ஹரி, சுரேஷ் கிருஷ்ணா, நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ் என பெரும் பட்டாளமே உள்ளது. 

கே பாலச்சந்தரின் செல்லப் பிள்ளைகளாக வலம் வந்தவர்களில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் மிக மிக முக்கியமானவர்கள். சிவாஜி கெய்வாட்டாக சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவரை, கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரில் பெரும் ஆளுமையாக உருவாக்கியதில் கே பாலச்சந்தரின் பங்கு அளப்பரியது. அதேபோல், உலக நாயகன் கமல்ஹாசனையும் பெரும் விருட்சமாக வளர்த்தெடுத்தார். இந்நிலையில், கே பாலச்சந்தரின் 94வது பிறந்தநாளான இன்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலக வாசலில் உள்ள அவரது சிலைக்கு திரையுலகினர் மரியாதை செலுத்தினர். இதில் பாலசந்தர் மகள் புஷ்பாகந்தசாமி, இயக்குநர்கள் பாரதிராஜா, வசந்த், சரண், நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இதனிடையே கமல்ஹாசனும் கே பாலச்சந்தர் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பாலச்சந்தர் குறித்து அவரது பிறந்தநாளில் மட்டும் தான் பேச வேண்டும் என்றில்லை. நான் அவரைப் பற்றி பேசாத நாளே கிடையாது என்பது என்னுடன் இருப்பவர்களுக்கு தெரியும். என்னை பொறுத்த வரையில் அவர் எனக்கு பல முக்கியத்துவம் கொடுத்து என் வாழ்வில் முன்னேற்றங்களை கொடுத்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியவர் அல்ல. நடிகர்கள், நட்சத்திரங்கள் என பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் ஏராளம், அதனால் தனக்கு எந்த பலனும் இல்லையென தெரிந்தாலும், தனது தொழிலுக்குத் தான் பலன் என தெரிந்தே செய்தவர்.

விடாமுயற்சியாக புதுமைகளையும் புது முகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு எந்த இயக்குநர்களையும் இதுவரை நான் பார்த்தது கிடையாது. என்னுடன் அவர் சம்பந்தப்படாமல் இருந்திருந்தாலும் அவரது பெயர் விடுபடாது. என் வாழ்விலும் என்னைப் போல பலரின் வாழ்விலும் செய்த மாற்றங்கள் ஏராளமானவை. அவர் குடும்பம் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய வீட்டு காம்பவுண்ட்க்குள் அடங்காத பெரிய குடும்பத்தை அவர் உருவாக்கி வைத்துவிட்டுத்தான் போயிருக்கார். கே பாலச்சந்தர் போய்விட்டார் என்று சொல்லக் கூட எனக்கு வாய் கூசுகிறது, அவர் எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். அவர் வாழ்க, இன்று அவர் பிறந்தநாள், எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்த்த நாள் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

தனது குருநாதர் கே பாலச்சந்தர் குறித்து கமல் பேசிய வீடியோ சினிமா ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனை போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் கே பாலச்சந்தருக்கு வீடியோ வெளியிட்டு பிறந்தநாளுக்கு வாழ்த்துவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow