'இனி ஸ்டாலினிடம் சொல்லி எந்த பயனும் இல்லை'.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ட்வீட்.. என்ன விஷயம்?
''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் இரவு அயனாவரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியது.
24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
''தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதியும், 'வீட்டுக்கு வெளியேயே ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொல்லப்படுகிறார். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தவறி விட்டது'' என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:
* செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.
* புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
* தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
* தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.
எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.
மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீதான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகிறது. ''தமிழ்நாட்டில் மக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தொடர் கொலைகள் நடந்து வருகின்றன'' என்று அதிமுகவினரும், ''எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு மீது குற்றம்சாட்டி வருகிறார். அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்'' என்று திமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?