ஆதவ் நீ முன் செல், நான் பின்னால் வருகிறேன் என்று திருமாவளவன் கூறுகிறாரா..? தமிழிசை
தவெக கட்சியில் இணைந்ததும் அதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில் ‘ஆதவ் நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன்’ என்று திருமாவளவன் கூறுகிறாரா என்று தெரியவில்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். முழு நேர அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் அறிவித்தார். 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் நான்கு கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விஜய் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, ஜனவரி 31-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், சமூக ஊடகப் பேச்சாளர் ராஜ் மோகன் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச்செயலாளர், ராஜ்மோகனுக்கு கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டனர். மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதிய பொறுப்பாளர்கள் குறித்த முக்கிய பட்டியலையும் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவை முன்னால் நீ செல் பின்னால் நான் வருகிறேன் என்று கூறி திருமாவளவன் அனுப்பியுள்ளாரா? என்று தெரியவில்லை என பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தது அரசியல் நாகரிகம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஆதவ் நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன் என்று திருமாவளவன் கூறுகிறாரா என்று தெரியவில்லை. திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்று கூறினார்.
What's Your Reaction?