ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா?... பால் கனகராஜிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை

பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Aug 9, 2024 - 15:03
 0
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா?... பால் கனகராஜிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை
பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் மற்றும் ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் 21 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிற்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பினர். அதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக பால்கனகராஜ் ஆஜராகி உள்ளார். 

அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பால் கனகராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தை தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தன் எழுப்பினார். 

அதனால் அந்த கோணத்தில் தங்களின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். அதனால் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பால்கனகராஜிற்கு சம்மன் கொடுக்கப்பட்டு தற்போது நேரில் வரவைத்து விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் பால் கனகராஜ் இதற்கு முன்பாக ரவுடி நாகேந்திரனை பரோலில் எடுத்தது இவர் தான். அதே போல தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்காக இரட்டை கொலை வழக்கு ஒன்றிலும் நீதிமன்றத்தில் பால்கனகராஜ் வழக்கு விசாரணை நடத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் மீதான வழக்கு ஒன்றிற்கும் பால் கனகராஜ் ஆஜராகி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா? அல்லது தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் தொடர்பாகவும் தகவல்களை சேகரிப்பதற்காகவும் பால்கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கும் முன்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன். இந்த கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது அஸ்வத்தாமனுடனான தொடர்பு போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அஸ்வத்தாமனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு பிரபல சோப்பு கம்பெனிக்கு சொந்தமான சுமார் 155 ஏக்கர் இடம் தொடர்பான பிரச்சனையில், அஸ்வத்தாமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு 155 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஏக்கர் தங்களுக்கு தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு ஏக்கர் சுமார் ரூ.2 கோடி எனவும் சுமார் ரூ.20 கோடி மதிப்புடைய இடத்தை தர வேண்டும் என்று அஸ்வத்தாமன் தரப்பில் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில், பிரபல ரவுடிகள் சம்போ செந்தில் சீசிங் ராஜா, மற்றும் நாகேந்திரன் ஆகியோர் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow