முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை
மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி. கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டி பகுதியில் கரு வேலமரக்காட்டுக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ஆண் உடலை கைப்பற்றி அப்பகுதியில் அவரின் தலை கிடக்கிறதா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதற்கிடையே அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் உள்ள டி. கல்லுப்பட்டி அரசு டாஸ்மாக் கடை அருகே துண்டிக்கப்பட்ட தலை மட்டும் கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றினர். தலையும், துண்டிக்கப்பட்ட உடலும் ஒருவரே என்பதை கண்டறிந்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? என நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகரான 52 வயது கொக்கி முருகேசன் என்பது தெரிய வந்தது.
இது குறித்து முருகேசனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். கொலை நடைபெற்ற மங்கம்மாள்பட்டி பகுதியில் இருந்து 4 கி.மீ தூரம் உள்ள டாஸ்மாக் கடை வரை ஆங்காங்கே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரும் இருக்கிறார்களா? எனவும் விசாரித்து வந்தனர். சம்பவம் தொடர்பாக தேவன்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொக்கி முருகேசன், ராஜசேகர் இருவரும் நண்பர்கள் என்றும் முருகேசன் மகன் மணியிடம் ராஜசேகர் தனது இரு சக்கரவாகனத்தை 25 ஆயிரத்துக்கு அடமானம் வைத்தது தெரியவந்தது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அடமானம் வைத்த இருசக்கர வாகனத்தை 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து ராஜசேகர் திருப்பி வாங்கி உள்ளார். அதற்கு மணி அடமானமாக கொடுத்த பணத்திற்கு ஆயிரம் ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதில் ராஜசேகருக்கும், மணிக்கும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி மணி அவரது நண்பர்கள் சரவணன், சங்கர், பூமர் சரவணன் ஆகிய நால்வரும் டி.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் உள்ள தனியார் மதுபான கூட்டத்திற்கு வந்து ராஜசேகர் மற்றும் பென்னி இருவரிடமும் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் இருவரும் லேசான காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் மற்றும் சங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மணி மற்றும் பூமர் சரவணன் இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டி சுடுகாடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் முருகேசன், ராஜசேகர், பென்னி மற்றும் சிலருடன் மது அருந்தி கொண்டு சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், பென்னி மற்றும் உடன் வந்தவர்கள் கத்தியை எடுத்து முருகேசனை கீழே தள்ளிவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், அவரது தலையை துண்டித்து உடலை மட்டும் அந்த இடத்தில் போட்டுவிட்டு தலையை நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து டி.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் உள்ள அரசு மதுபான கடைஅருகில் போட்டுச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன் விரோதத்தில் நண்பரின் மகனை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மகன் தலைமறைவாக இருந்ததால் சமாதான பேச்சுவார்த்தை என்று அழைத்து வந்து நண்பரையே கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் கல்லுப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?