தைப்பூச திருவிழா கொடியேற்றம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா இன்று (பிப். 5) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 10-ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும் நடைபெறும். பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், 15-ஆம் தேதி தெப்பத் தேர் உலாவும் நடைபெற உள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தையொட்டி மலைக்கோயிலில் மூன்று நாள்களுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
காலியாக சென்ற சிறப்பு ரயில்கள்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று (பிப். 5) முதல் இயக்கப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது. கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு விரைவு சிறப்பு ரயில் கோயம்புத்தூரில் இருந்து இன்று முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை காலை 9.35 மணிக்கு இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அதே நாள் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்று அடையும். அதேபோல் மறு திசையில், திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லா மெமு விரைவு சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து இன்று முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை பிற்பகல் இரண்டு மணிக்கு புறப்பட்டு அதே நாள் மாலை 5.50 மணிக்கு கோயம்புத்தூர் வந்து அடையும்.
இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இந்த ரயில் சேவை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்களும், பக்தர்களும் இல்லாமல் காலியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?