அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்.. மோடியுடன் விவாதித்ததாக டிரம்ப் தகவல்
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், “சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து பிரதமர் மோடி சரியானதைச் செய்வார். நாங்கள் விவாதித்து வருகிறோம்.” என்று கூறினார்.
மேலும் படிக்க: அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. உற்சாகத்தில் ஆதரவாளர்கள்
டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உட்பட பல்வேறு பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்தியா, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தையும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இது நமது நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் உறவுகளின் வலிமையை உணர்த்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணமாக இந்த பயணம் இருக்கும். 2024 நவம்பரில் டிரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.
What's Your Reaction?