Mohammed Deif : ஹமாஸுக்கு அடுத்த பேரிடி.. ராணுவத் தளபதி முகமது தைஃப் படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!

Mohammed Deif Killed in Israel Attack : இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது தைஃப்பின் இயற்பெயர் முகமது தியாப் அல்-மஸ்ரி ஆகும். இவர் 1965ம் ஆண்டு காசாவின் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். ஹமாஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், கடந்த 2002ம் ஆண்டு ஹமாஸ் ராணுவ அமைப்பான Al-Qassam Brigadesக்கு தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Aug 1, 2024 - 20:02
Aug 2, 2024 - 10:38
 0
Mohammed Deif : ஹமாஸுக்கு அடுத்த பேரிடி.. ராணுவத் தளபதி முகமது தைஃப் படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!
Hamas Military Commander Mohammed Deif Assassination

Mohammed Deif Killed in Israel Attack : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. 

இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த இஸ்மாயில் ஹனியே, வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதி செய்தது.

இஸ்மாயில் ஹனியே மரணத்துக்கு காரணமான இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஹமாஸ் அமைப்பும், ஈரானும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஹமாஸுக்கு அடுத்த பேரிடியாக அந்த அமைப்பின் ராணுவத் தளபதி முகமது தைஃப் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார். இதை இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் உயிரிழந்தனர். இதில் ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தளபதி முகமது தைஃப்பும் ஒருவர் என்றும் இது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது தைஃப்பின் இயற்பெயர் முகமது தியாப் அல்-மஸ்ரி ஆகும். இவர் 1965ம் ஆண்டு காசாவின் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார்.  ஹமாஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், கடந்த 2002ம் ஆண்டு ஹமாஸ் ராணுவ அமைப்பான Al-Qassam Brigadesக்கு தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மக்கள் பலரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் இஸ்ரேல் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போருக்கு அச்சாரமிட்ட இந்த தாக்குதலுக்கு 
முகமது தைஃப்தான் மூளையாக செயல்பட்டுள்ளார். இவரை அமெரிக்கா 2015ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow