Actor Prashanth Drive Bike Without Helmet : பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சுந்தந்திர தினத்தை முன்னிட்டு சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 2ம் பாகம், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதனால் அந்தகன் ரிலீஸை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு மாற்றியது படக்குழு. இதனையடுத்து இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பிரசாந்த் ஹீரோவாக மீண்டும் களமிறங்கவுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்தகன் திரைப்படம் 5 ஆண்டுகளை கடந்து இப்போது தான் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷனில் டாப் ஸ்டார் பிரசாந்த் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், இந்த ப்ரோமோஷன் எல்லை மீறி போகவே, ஒருபக்கம் அபராதம், இன்னொரு பக்கம் கடும் கண்டனங்கள் என பிரசாந்தை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். அதாவது அந்தகன் ரிலீஸை முன்னிட்டு பிரபல யூடியூப் சேனலுக்கு பிரசாந்த் பேட்டிக் கொடுத்துள்ளார்.
முன்பெல்லாம் இதுபோன்ற பேட்டிகள் ஸ்டுடியோ உள்ளேயே படமாக்கப்பட்டன. ஆனால், கடந்த சில நாட்களாக காரில் ட்ரைவ் செய்துகொண்டே பேட்டி எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது. இதெல்லாம் கொஞ்சம் பழசா இருக்கே என யோசித்தார்களோ என்னவோ! பிரசாந்த் ஒரு புல்லட் பைக்கை ட்ரைவ் செய்ய, அவருக்குப் பின்னால் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அமர்ந்து கேள்விகள் கேட்டபடி இந்த ப்ரோமோஷனை ஷூட் செய்துள்ளனர். ஐடியா நன்றாக இருந்தாலும் ரிஸ்க் பெரிது என்பதை பிரசாந்த் கவனத்தில் கொள்ளவே இல்லை.
அதாவது பிரசாந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இருவருமே ஹெல்மெட் அணியாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முன்னணி நடிகராக இருந்துகொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம எனவும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் இவர்களுக்குத் தெரியாதா என்றும் விமர்சித்து வந்தனர். ஏற்கனவே இருசக்கர வாகன விபத்துகள் அதிகரிப்பதோடு, இதனால் ஏராளமானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
மேலும் படிக்க - விஷாலுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்
இப்படியான சூழலில் இது ரசிகர்களையும் இளைஞர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் எனவும் கமெண்ட்ஸ் செய்தனர். அதேபோல், நடிகர்கள், பிரபலங்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு படத்துக்காக இப்படி எல்லை மீறி ப்ரோமோஷன் செய்யக் கூடாது என அட்வைஸ் செய்துள்ளனர். இதனிடையே பிரசாந்தின் வீடியோ வைரலானதை பார்த்த சென்னை போக்குவரத்து காவல்துறை, இந்தச் சம்பவத்திற்காக 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நடிகர் பிரசாந்திற்கு ரூ.2,000 அபராதம் | Kumudam News 24x7#prashanth #actorprashanth #helmet #andhagan #chennaitrafficpolice #Kumudamnews24x7 pic.twitter.com/My0io1Sezl
— KumudamNews (@kumudamNews24x7) August 1, 2024
பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக பிரசாந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் இருவருக்கும் சேர்த்து, மூன்று பிரிவுகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிரசாந்த் போன்ற நடிகருக்கெல்லாம் இந்த அபராத தொகை அதிகம் எனவும், அவரே பாவம் எப்படி 2000 ரூபாய் அபராதம் செலுத்துவார் எனவும் கலாய்த்து வருகின்றனர். ஆனால், சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான், யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அபராதம் விதிப்பதே சரி எனவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.