அண்ணா நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆர். ராசா, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக அமைதி பேரணி அறிவிக்கப்பட்டதையடுத்து சென்னை மெரினா சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டது.
- கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு இராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
- பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாமல் வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு அண்ணா சிலை வழியாக அனுப்பப்பட்டது.
அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று… pic.twitter.com/MkzGF8xtAQ — M.K.Stalin (@mkstalin) February 3, 2025
What's Your Reaction?