மத்திய பட்ஜெட்.. கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல்- பினராயி விஜயன் ஆதங்கம்

மத்திய பட்ஜெட் கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  குற்றம்சாட்டியுள்ளார்.

Feb 2, 2025 - 13:00
 0
மத்திய பட்ஜெட்.. கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல்- பினராயி விஜயன் ஆதங்கம்
நிர்மலா சீதாராமன்- பினராயி விஜயன்

நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதாவது, மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றவும் பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுளன. 

அதன்படி, பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் நிஃப்டம் ( NIFTEM) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், மக்கானா  எனப்படும் தாமரை விதை உற்பத்திக் கூடம் அமைக்கவும், ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு, விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பீகாரில் பசுமைவழி விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "2025-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை.

எய்ம்ஸ் மருத்துவமனைகள் இல்லை, விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு ஆதரவு இல்லை. நமது கடன் வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழில்துறை ஓரங்கட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக மத்திய பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘திருக்குறளை’ கூறி பட்ஜெட் உரையை தொடங்குவார். ஆனால், இந்த வருடம் முதலில் திருக்குறளை கூறாதது சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow