2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக.. கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கொள்கைத் தலைவர்கள் சிலையை திறைந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

Feb 2, 2025 - 12:31
 0
2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக.. கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை
தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் தலைவராக உருவெடுத்தார். அப்போது அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் ‘2026 சட்டசபை தேர்தல் தான் நமது இலக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

புதிய கட்சி தொடங்கிய விஜய், தான் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் அரசியல் தலைவர்கள் பலரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. தொடர்ந்து, பல சமூக பிரச்சனைகளுக்கு விஜய் குரல் கொடுத்து வந்தார். இருந்தாலும், களத்தில் இறங்கி மக்களை சந்திப்பது தான் முழுமையான அரசியல் என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசையும் மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது நிலையில் அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 

அதுமட்டுமல்லாமல், பரந்தூர் விமான நிலையத்தை தாண்டி இந்த திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது என்று வெளிப்படையாக தாக்கினார். இது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் குறித்த பட்டியலை விஜய் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு இன்று அறிவிக்கப்பட உள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow