சாதிக்க ஏழ்மை தடையில்லை.. சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் சேர்ந்த பார்த்தசாரதி - யார் இவர்?
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையத்தில் சுமார் 2 மாதங்கள் ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத பயிற்சி பெற்றுள்ளார் பார்த்தசாரதி.
சென்னை: இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஜேஇஇ (JEE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஜேஇஇ முதன்மை தேர்வு இரண்டு கட்டங்களாக கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதங்கள் நடந்தன.
இதில் முதற்கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், 2ம் கட்ட முதன்மை தேர்வு (அட்வான்ஸ்ட்) முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டன. சுமார் 10 லட்சம் பேர் ஜேஇஇ முதன்மை தேர்வை எழுதிய நிலையில், நாடு முழுவதும் 56 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர்.
ஜேஇஇ முதன்மை தேர்வில் தமிழ்நாட்டின் ராஜபாளையம் அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த மாணவன் பார்த்தசாரதி வெற்றி பெற்று அசத்தினார். மாணவன் பார்த்தசாரதி ராஜபாளையம் சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்து இந்த சாதனையை புரிந்துள்ளார்.
மாணவன் பார்த்தசாரதியின் தந்தை சந்திரபோஸ் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாததால் அவரால் தனியார் பயிற்சி மையத்தில் சேர முடியவில்லை. இதனால் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையத்தில் சுமார் 2 மாதங்கள் ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத பயிற்சி பெற்றுள்ளார் பார்த்தசாரதி.
ஜேஇஇ முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற பார்த்தசாரதி, தற்போது சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜீனியரிங் (aerospace engineering) படிப்பை படிக்க தேர்வு செய்துள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது திறமையின்மூலம் உயர்படிப்புக்கு தேர்வாகியுள்ள பார்த்தசாரதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தான் படைத்த சாதனை குறித்து புன்னகை மலர பேசிய மாணவன் பார்த்தசாரதி, ''முதன்முறையாக சென்னைக்கு வந்து பயிற்சி பெற்றபோது பெரும் குழப்பம் அடைந்தேன். ஆனால் எனது பள்ளி ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். ஜேஇஇ தேர்வை எழுவதற்காக மிக கடினமாக பயிற்சி பெற்று, இந்த தேர்வை எழுதியுள்ளேன்'' என்று கூறினார்.
தனது மகனின் வளர்ச்சியை பார்த்து பெருமிதத்துடன், ஆனந்த கண்ணீருடன் பேசிய தந்தை சந்திரபோஸ், ''10ம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பெற்ற நான், குடும்ப வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாமல் ஆட்டோ ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டேன். குடும்ப வறுமை எனது 3 குழந்தைகளின் கல்வியை பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
இதனால் அவர்களை நன்றாக படிக்க வைக்க முடிவு செய்தேன். ஒருமுறை ரயிலில் சென்றபோது ஜேஇஇ தேர்வு குறித்து மற்றவர்கள் பேசுவதை அறிந்து கொண்டேன். நான் இதை எனது மகனிடம் வந்து சொன்னபோது, அவர் இந்த தேர்வுக்கு ஏற்கெனவே தயாராகி கொண்டிருந்தார்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
What's Your Reaction?