சென்னை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லியாஸ் தமிழரசன் என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. லியாஸ் தமிழரசனும் தனியார் சட்டக் கல்லூரியில் படித்து வருவதோடு, பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற லியாஸ் தமிழரசன், சீக்கிரமே உன்னை திருமணம் செய்வதாக கூறியதாக தெரிகிறது.
அதன்பின்னர், அந்த இளம்பெண்ணிடம் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக முப்பது லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் நகை ஆகியவைகளை தமிழரசன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த இளம்பெண்ணுக்கு, தமிழரசன் மீது சந்தேகம் வந்ததால், தமிழரசனின் லேப்டாப்பை சோதனை செய்துள்ளார். அப்போது தமிழரசனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது, உன்னுடன் தனிமையில் இருந்ததையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீடியோவை காட்டி மீண்டும் மீண்டும் பணம் பறித்ததாகவும் தெரிகிறது.
அதுமட்டும் இல்லாமல், தமிழரசனுக்கு சில தினங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான அந்த இளம்பெண், நடந்த சம்பவங்களை அவரது பெற்றோரிடம் கூற, அவர்களோ சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து தமிழரசனை கைது செய்த போலீசார், அவரது லேப்டாப், செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அதில், 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே, ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இதேபோல் திருமணம் செய்துகொள்வதாக கூறி, தன்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்துள்ளார். பாஜக பிரமுகர் தமிழரசன் மீது, அடுத்தடுத்து இரண்டு பெண்கள் புகார் கூறியுள்ளது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரசனால் மேலும் எத்தனை பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழரசனின் தந்தையிடம், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி அடுத்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, தமிழரசனின் தந்தை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், ஏமாற்றி வாங்கிய பணத்தை தரமுடியாது என மிரட்டுவதும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்குமா? தமிழரசனின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.