நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... என்ன வழக்கு?... முழு விவரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

Jul 11, 2024 - 11:00
Jul 11, 2024 - 15:53
 0
நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... என்ன வழக்கு?... முழு விவரம்!
Sattai Duraimurugan Arrested

தென்காசி: நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். 'சாட்டை' என்னும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக திமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். 

இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இந்த புகாரின்பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சியில் இருந்து வந்த  சைபர் கிரைம் போலீசார், குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்படுவது இது முதன்முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபாக்ஸ்கார்ன் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சானதால், தொழிலாளர்கள் பலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தேவையில்லாத வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த வழக்குக்காக பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சாட்டை துரைமுருகன், பின்பு நீதிமன்றத்தில் போராடி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்தும் திமுக அரசின் குறைகளை விமர்சிப்பதை சாட்டை துரைமுருகன் நிறுத்தவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய துரைமுருகன், அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றார்.

மேலும் அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சாராய வியாபாரம் செய்பவர் என்று கூறியது, திமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.

கடைசியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக அரசு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். இதுதவிர சாட்டை துரைமுருகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. சாட்டை துரைமுருகன் திமுக அரசின் தவறுகளை அடிக்கடி சுட்டிக்காட்டுவதால் அவரை வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow