பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி!

உலக ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்று விருது மற்றும் அங்கீகாரங்களைப் பெற்ற “சத்குரு குருகுலம் - சமஸ்கிருதி” முன்னாள் மாணவர்களை சத்குரு பாராட்டி உள்ளார்.

Jan 4, 2025 - 13:15
Jan 4, 2025 - 13:16
 0
பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி!
சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி!

உலக ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்று விருது மற்றும் அங்கீகாரங்களைப் பெற்ற “சத்குரு குருகுலம் - சமஸ்கிருதி” முன்னாள் மாணவர்களை சத்குரு பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “நம் பாரத நாகரிகத்தின் மிகச்சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சமஸ்கிருதி” என குறிப்பிட்டு உள்ளார். 

உலக ஆயுர்வேத காங்கிரஸின் 10-வது மாநாடு கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் டேராடூனில் நடைபெற்றது. 58 நாடுகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சத்குரு குருகுலத்தின் ஒரு அங்கமான சம்ஸ்கிருதி பள்ளியின் முன்னாள் மாணவர்களான கௌதம் மற்றும் ருஷ்மிதா ஆகியோரும் தங்களின் பங்களிப்பை அளித்து இருந்தனர். 

இம்மாநாட்டில் கௌதம் அவர்களின் ‘ஆயுர்வேதா - ஆஜீவ மார்க்கம்’ எனும்  குறும்படம் “ஆத்ரேய சம்பதா” எனும் பெருமை மிகு விருதினை வென்றது. இந்த குறும்படம், ஆயர்வேதம் என்பது சிகிச்சை முறைகளை உள்ளடக்கிய ஒரு மருத்துவ பிரிவு மட்டுமல்ல, அது மனிதர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்க வேண்டும் என கூறும் வழிகாட்டி என்பதை பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. 

அதே போல் ருஷ்மிதா அவர்கள் 2 ஆய்வுக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் சமர்பித்து இருந்தார். இந்த 2 ஆய்வுக் கட்டுரைகளும் WAC எனும் ஆய்விதழில் வெளியாக தேர்வாகி உள்ளது. 

இவர்களின் இந்த சாதனையை பாராட்டி சத்குரு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அற்புதம்! கௌதம் மற்றும் ருஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள். இதுதான் சம்ஸ்க்ருதி - இந்த நாகரிகத்தின் மிகச்சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனக் கூறியுள்ளார்.

பரதம், களரி மற்றும் மிருதங்கம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற கௌதம் அவர்கள் திரைத்துறையில் ஒளி அமைப்பு, திரைக்கதை எழுதுதல், இயக்கம் ஆகியவற்றில் ரவிவர்மன் முதல் பல முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது மேடை நாடகங்களை உருவாக்குதல், சர்வதேச அரங்குகளில் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒளி அமைப்புகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

ருஷ்மிதா அவர்கள் அமெரிக்காவில் இயங்கும் செயல்பாட்டு மருத்துவத்திற்கான கல்வி நிறுவனத்தில் (IFM, WA, USA) அடிப்படை பயிற்சியை முடித்துள்ளார். இதன் மூலம் செயல்பாட்டு மருத்துவத்தில் பழகுனருக்கான சான்றிதழை அவர் பெற்றுள்ளார். இந்த IFM செயல்பாட்டு மருத்துவத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே கல்வி நிறுவனமாக திகழ்கிறது. 

சம்ஸ்கிருதி பள்ளியில் வாய்பாட்டு, பரதம், களரி, இசைக் கருவிகள், ஓவியம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரத பாரம்பரிய கலைகளும், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளும், அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பள்ளி மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ந்த கலைஞர்களாக வெளிவருகின்றனர். அவர்கள் உலகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர், மேலும் தாங்கள் கற்றுத் தேர்ந்த கலைகளை மக்களுக்கு பயிற்றுவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow