2024 கேல் ரத்னா விருது.. குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு அறிவிப்பு

இந்தியாவைச் சேர்ந்த நான்கு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு

Jan 2, 2025 - 15:36
 0
2024 கேல் ரத்னா விருது.. குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு அறிவிப்பு
மனு பாக்கர்-குகேஷ்

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர்களை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ‘கேல் ரத்னா’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் இடம்பெறவில்லை. இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனிடையே ‘கேல் ரத்னா’ விருதிற்கு மனு பாக்கர் விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், மனு பாக்கரின் தந்தை தாங்கள் முறையாக விண்ணப்பித்தும் பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, 'கேல் ரத்னா’ விருதிற்கு பரிந்துரைக்கப்படாதது குறித்து மனு பாக்கர் பேசியதாவது, விருதுகளும், அங்கீகாரமும் எனக்கு ஊக்கமளித்தாலும், அவை எனது  நோக்கம் அல்ல. ஒரு வீராங்கனையாக நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே எனது இலக்கு. விருதுக்கு விண்ணப்பிக்கும் போது பிழை இருந்திருக்கக் கூடும். விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நாட்டுக்காக பதக்கங்களை வெல்வேன்” எனக் கூறினார். 

இருந்தாலும், ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்த மனு பாக்கருக்கு 'கேல் ரத்னா’ விருதிற்காக விண்ணப்பித்தால் மட்டும் தான் விருது வழங்கப்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தற்போது ‘கேல் ரத்னா’ விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத்சிங் மற்றும் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு வீரர்களுக்கும் வரும் 17-ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow