அச்சச்சோ! வெறும் 1 செ.மீட்டரில் கோப்பையை நழுவ விட்ட நீரஜ் சோப்ரா.. ரசிகர்கள் ஆறுதல்!

காலில் ஏற்பட்ட காயம், போட்டி நடந்த பிரசல்ஸ் நகரில் நிலவிய கடும் குளிர் ஆகியவை நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் விடாமுயற்சியுடன் தீரத்துடன் போராடி வெறும் 1 சென்டிமீட்டரில் தான் வெற்றியை அவர் நழுவ விட்டுள்ளார்.

Sep 15, 2024 - 09:21
 0
அச்சச்சோ! வெறும் 1 செ.மீட்டரில் கோப்பையை நழுவ விட்ட நீரஜ் சோப்ரா.. ரசிகர்கள் ஆறுதல்!
Neeraj Chopra

பிரசல்ஸ்: பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி தொடர் கடந்த 13ம் தேதி மற்றும் 14ம் தேதி என 2 நாட்கள் நடந்தது. இந்த தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, வெண்கலம் வென்ற கிரேனேடியன் நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் கோப்பையை கைப்பற்றுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு இடையே களமிறங்கிய நீரஜ் சோப்ரா முதல் இரண்டு வாய்ப்பில் 82.04 மீ மற்றும் 83.30 மீ தூரம் ஈட்டியை எறிந்தார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் 87.86 மீ தூரம் எறிந்தார்.

ஆனால் கிரேனேடியன் நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தனது முதல் முயற்சிலேயே 87.87 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதலிடம் பிடித்தார். ஆண்டர்சன் பீட்டர்ஸ்க்கும், நீரஜ் சோப்ராவுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 1 சென்டிமீட்டர் மட்டுமே. வெறும் 1 செ.மீட்டரில் கோப்பையை நழுவ விட்ட நீரஜ் சோப்ரா மிகவும் ஏமாற்றம் அடைந்தார். 26 வயதான நீரஜ் சோப்ரா 2022ம் ஆண்டு டைமண்ட் லீக் கோப்பையை வென்று இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு 2ம் இடம் பிடித்து இருந்த அவர் இந்த ஆண்டும் 2வது இடம் பிடித்து கோப்பையை நழுவ விட்டுள்ளார். ஜெர்மனி நாட்டின் ஜூலியன் வெப்பர் தனது முதல் முயற்சியில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம், போட்டி நடந்த பிரசல்ஸ் நகரில் நிலவிய கடும் குளிர் ஆகியவை நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் விடாமுயற்சியுடன் தீரத்துடன் போராடி வெறும் 1 சென்டிமீட்டரில் தான் வெற்றியை நழுவ விட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கதை கைப்பற்றி இருந்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்று இருந்தார். ஆனால் டைமண்ட் லீக் தொடரில் அர்ஷத் நதீம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

டைமண்ட் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டு நூலிழையில் வெற்றியை தவற விட்ட நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ’’கடுமையான வானிலை, காயம் ஆகியவற்றை தாண்டி நீங்கள் இந்தளவு சாதித்துள்ளது சாதாரண விஷயம் இல்லை. காயத்தில் இருந்து குணமடைந்து வலிமையுடன் பெரும் வெற்றிகளை ஈட்டுங்கள்’’என்று ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow