ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆசாத். இவர் கடந்த 5 மாதங்களாக சென்னை மண்ணடி தங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பாரிமுனையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதி கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில் கடந்த 14ஆம் தேதி தனது நண்பர் முகமது ஜப்ரான் என்பவரிடம் 6 லட்ச ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புரசைவாக்கத்தில் நகைக் கடையில் வேலை பார்க்கும் தனது தம்பியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கு கனரா வங்கியில் தன் நண்பர் வங்கி கணக்கில் 70 ஆயிரம் ரூபாயை செலுத்தி விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், இருசக்கர வாகனத்தை எடுத்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் காக்கி பேன்ட் மற்றும் கலர் மேல்சட்டையில் தாங்கள் போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த இருவரும் ஆசாத் பைக் சாவியை பறித்துக்கொண்டு அவரது உடமைகளை சோதனை செய்து இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என கேட்டதுடன் ஆசாத்தை அவர்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புரசைவாக்கம் ராமா சாலைக்கு அழைத்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஆசாத்தை மிரட்டி அவரிடம் இருந்த 5.50 லட்சம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு நாளை காலை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிவிட்டு பணத்துடன் சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற ஆசாத், நண்பர்கள் தெரிவித்ததின் பேரில் இரு தினங்கள் கழித்து இன்று 16ஆம் புகார் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆசாத் கொண்டு சென்ற பணம் ஹவாலா பணம் என்பதால் போலீசுக்கு சென்றால் பிரச்சினை வந்துவிடும் என கருதி புகார் அளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் பணம் கொடுத்து அனுப்பிய நபர் கூறியதன் பேரில் புகார் அளித்ததும் விசாரணை தெரியவந்தது.
இதனால், ஹவாலா பணம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக எழும்பூர் நீதிமன்ற உத்தரவை பெற்று ஜெய்னுல் தங்கி இருந்த மண்ணடியில் உள்ள மேன்ஷன் மற்றும் அவர் பணியாற்றிய ஹக் என்பவரின் செல்போன் கடையில் கீழ்ப்பாக்கம் போலீசார் சோதனை மேற்கொள்ள சென்றனர்.
அப்போது ஈவினிங் பஜாரில் உள்ள ஹக் என்பவரின் செல்போன் கடையை சோதனை செய்யவிடாமல், வியாபாரி சங்கத்தினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் சோதனை செய்யாமல் திரும்பி சென்றனர். மேலும் போலீஸ் என கூறி ஆசாத்திடம் ஹவாலா பணத்தை பறித்து சென்ற இருவரை பிடிக்க உதவி ஆணையர் தனிப்படை சேர்ந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான இருசக்கர வாகன எண்ணை வைத்து கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் சார்லஸ் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சார்லஸ் 2009 பேட்சை சேர்ந்த முதல்நிலை காவலர் என்பதும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் துறையில் பணியாற்றி வருவதும், கடந்த சில தினங்களாக ஆன் டியூட்டியில் பொன்னேரி காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்வதும் தெரியவந்துள்ளது.
மேலும் சார்லஸ் ஏலச்சீட்டு மூலமாக 13 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்து வந்த நிலையில் ஹவாலா பணம் கைமாறுவதை தெரிந்து கொண்டு, தனது பள்ளி நண்பரான புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (34) உடன் சேர்ந்து ஜெபுனுல் ஆசாத்தை பின் தொடர்ந்து போலீஸ் என கூறி 5.50 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை பறித்து சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈவினிங் பஜார் பகுதியில் கைமாறுவதை அங்கு இருக்கும் சிலர் மூலமாக தெரிந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. ஹவலா பணம் என்பதால் புகார் அளிக்கமாட்டார் என நினைத்தாகவும், அதே போல இரண்டு தினங்களாக புகார் அளிக்கவில்லை எனவும், அதனை தனது நண்பர் மூலமாக நோட்டமிட்டு புகார் அளிக்காததால் பிரித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் முதல்நிலை காவலர் சார்லஸ் மற்றும் அவரது நண்பரும் அதிமுக நிர்வாகி புரசை பாண்டி என்பவரின் மகனுமான ராமச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.