டிக் டாக் மூலம் சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான ஜி.பி.முத்து, யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். நாளுக்கு நாள் இவரின் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து பல லட்சங்களை தாண்டியது. இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் அறியும் நபராக பிரபலம் அடைந்தார்.
தற்போது கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக இருந்து வரும் ஜி.பி.முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் பல லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்தார்.
இந்நிலையில், வீதியில் தரக்குறைவாக நடந்துகொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். தமிழ் மாதத்தில் முதல் நாள் இந்த கோவிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜி.பி.முத்துவும் சில மாதங்களில் பங்கேற்பார். அதே போல் இந்த கோவிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் அந்த கோவிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த ஜி.பி.முத்து மகேசை இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வீதிக்கு வந்த ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று பேசுகிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சாதாரண நிலையில் இருந்து, முன்னேறி தற்போது பிரபலம் அடைந்துள்ள நிலையில், இதுபோன்ற சாதரண விஷயத்திற்காக கீழ்த்தரமாக ஜி.பி.முத்து நடந்துகொள்வதா என்று இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.