ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவு ரவுடியும், தேடப்படும் குற்றவாளியுமான சம்போ செந்திலின் எதிரியாக காக்கா தோப்பு பாலாஜி உள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆர்கே நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். அவர் 12 முறை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை [18-09-24] அதிகாலை 4.50 மணியளவில் கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த நிலையில், கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக ஓட்டுனர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் பின்பகுதியை சோதனையிட்ட போது, கார் திடீரென புறப்பட்டு சென்றுள்ளது.
உடன் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. அந்த காரை விரட்டி சென்று, சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிடி குடியிருப்பு பகுதிக்கு சென்ற காக்கா தோப்பு பாலாஜி காரை விட்டுவிட்டு புதரை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, போலீஸ் வாகனம் வருவதை கண்டு போலீசாரை நோக்கி தான் வைத்து இருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதில் போலீஸ் வாகனத்தின் பேனட் மற்றும் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. பின்னர் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டதில், காக்கா தோப்பு பாலாஜிக்கு இடது பக்க மார்பில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காக்கா தோப்பு பாலாஜியின் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. என்கவுன்டர் தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காக்கா தோப்பு பாலாஜி சென்ற காரை சோதனை செய்ததில் அதில் 10 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் வீச்சரிவாள் இருந்தது தெரியவந்துள்ளது. காக்கா தோப்பு பாலாஜி மீது 59 வழக்குகள் உள்ளது, அதில் ஆறு கொலை வழக்குகளும், 17 கொலை முயற்சி வழக்குகளும், ஒரு கஞ்சா வழக்கும் மற்றும் 34 இதர வழக்குகளும் உள்ளது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில், சென்னை காவல்துறை இணை ஆணையர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், காக்கா தோப்பு பாலாஜியுடன் காரில் சென்ற, ஓட்டேரி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரையும் போலீஸார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, சத்தியமூர்த்தி மீது கஞ்சா கடத்தியதாக எம்கேபி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கும் பாலாஜிக்கும் என்ன தொடர்பு?, கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.