ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி.. லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி.. இங்கிலாந்து த்ரில் வெற்றி

லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Sep 14, 2024 - 17:59
Sep 14, 2024 - 18:05
 0
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி.. லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி.. இங்கிலாந்து த்ரில் வெற்றி
லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சவுதம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதனையடுத்து, இரண்டாவது டி20 போட்டி, வேல்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கிற்கு களம் புகுந்தது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களை பிளந்து கட்டினர். இதனால், 4 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணி 50 ரன்களை கடந்தது.

டிராவிஸ் ஹெட் 31 (14 பந்துகள்) ரன்களும், மேத்யூ ஷார்ட் 28 (24 பந்துகள்) ரன்களும் எடுத்து வெளியேறினார். கடந்த சில போட்டிகளாக சோபிக்காத, ஃபிரேசர் மெக்கர்க் 31 பந்துகளில் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும், சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார். அவருக்கு உறுதுணையாக ஜோஷ் இங்க்லிஷ் 26 பந்துகளில் (5 பவுண்டர்கள், ஒரு சிக்ஸர்) 42 ரன்கள் எடுத்தார்.

14 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ப்ரைடன் கார்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதனால், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 34 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர். குறிப்பாக லியாம் லிவிங்ஸ்டன் 47 பந்துகளில் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 87 ரன்கள் எடுத்தார்.

அதேபோல், ஜேக்கப் பேத்தல் 24 பந்துகளில் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 44 ரன்கள் எடுத்தார். அதிலும், ஆடம் ஜம்பா வீசிய 3ஆவது ஓவரில், தொடர்ச்சியாக 4, 6, 4, 4, 2 என 20 ரன்கள் எடுத்தார். இருவரும் முறையான பாட்னர்ஷிப் அமைத்து 47 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தனர்.

இதனால், இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் 2 விக்கெட்டுகளை சீன் அப்போட் கைப்பற்றினார். மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் மேத்யூ ஷார்ட் கைப்பற்றி அசத்தினார். ஆனாலும், வெற்றி கைகூடவில்லை. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow