Indian Cricket Team Head Coach Gautam Gambhir : வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி [19ம் தேதி] 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி கடைசியாக, 2024 மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இருந்தது. தொடர்ந்து டி20 உலகக்கோப்பை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்தோடு இந்திய அணி உள்ளது.
அதே சமயம் வங்கதேச அணியோ, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 45.83 சதவிகத்துடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி, புள்ளிப் பட்டியலில் முன்னேறும் உத்வேகத்துடன் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கவுதம் கம்பீர்(Gautam Gambhir) இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இந்த தொடர் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலு, கவுதம் கம்பீர் தலைமையில், விராட் கோலி, ரோஹித் சர்மா எப்படி விளையாடப்போகிறார்கள் என்று ரசிகர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கௌதம் கம்பீர், “எந்த அணியுடன் விளையாடினாலும், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் மற்றவர்களின் திறமையை மதிப்போம். களத்தில் இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள் தான். யார் சிறப்பாக வியூகங்களை கட்டமைக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் முதல் நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய மைதானங்களில் இருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.
எப்பொழுதும் பேட்ஸ்மேன்களை பற்றியே கேள்வி கேட்கப்படும், பந்துவீச்சாளர்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேச வைத்துள்ளார்கள். பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளார், டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்தால் வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி விமர்ச்சனம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் 2 அல்லது 3 நாட்களுக்குள் முடிந்தால் சுழற்பந்து வீச்சாளர்களை விமர்சிக்கிறோம்; மைதானத்தை விமர்சிக்கிறோம். இது தவறான அனுகுமுறை” என்று தெரிவித்தார்.