பாபர் அசாமுக்கு மனநல கோளாறு.. கேப்டன் பொறுப்பு கூடாது - திகீர் கிளப்பும் முன்னாள் பாக். வீரர்

பாபர் அசாமிற்கு மனநலப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது என்றும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்திஃப் கூறியுள்ளார்.

Sep 17, 2024 - 22:00
 0
பாபர் அசாமுக்கு மனநல கோளாறு.. கேப்டன் பொறுப்பு கூடாது - திகீர் கிளப்பும் முன்னாள் பாக். வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் தொடர்ந்து கோலோச்சுவது என்பது மிக அரிதாகவே நடக்கிறது. டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், கர்ஃபீல்ட் சோபர்ஸ், ஜாக் ஹோப்ஸ், சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்ன், இம்ரான் கான், ரிச்சர்ட் ஹாட்லீ, வாசிம் அக்ரம், இயன் போத்தம், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், கபில்தேவ், ஆடம் கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், கிளென் மெக்ராத், சுனில் கவாஸ்கர், ஜெயவர்தனே, முத்தையா முரளிதரன், ஷோயப் அக்தர் போன்ற வீரர்கள் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்களாக போற்றப்பட்டு வருகின்றன.

அவ்வாறு சமீபகால கிரிக்கெட்டில் ஃபாஃப்-4 என்று அழைக்கப்படும் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகிய நால்வரும் சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடி வருகின்றனர். பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஜோ ரூட் 34 சதங்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதில், பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 4ஆவது அதிகப்பட்ச சராசரி (56.72), ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்தது, சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது அதிக ரன்கள் (4,145), சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்தவர்களில் 4ஆவது இடம், என பல சாதனைகளை படைத்துள்ளார். பல போட்டிகளில் தனிநபராக ஆட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார். இதனால், சிறந்த வீரர் விராட் கோலியா, பாபர் அசாமா என கிரிக்கெட் ரசிகர்கள் அடிக்கடி பெரிய போரே நடத்திக்கொண்டிருந்தனர்.

ஆனால், மோசமான ஃபார்ம் காரணமாக 2023 உலகக்கோப்பை தொடரில் இருந்து, கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம். மேலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், பாபர் அசாம் அரைசதம் அடித்து 600 நாட்களுக்கு மேலாகி விட்டது.

இதற்கிடையில், பாபர் அசாம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியதால், கிரிக்கெட் உலகில் பரபரப்பானது. ஆனால், வதந்தி என்று தெரியவந்ததை அடுத்து, அந்த பரபரப்பு ஓய்ந்தது. இதற்கிடையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக, பாபர் அசாமை கேப்டனாக நியமிப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விவாதித்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்திஃப் பாபர் அசாமின் சமீபத்திய போராட்டங்களில், தொழில்நுட்ப குறைபாடுகளை விட, மன அழுத்தம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சில வடிவங்களின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அணியை வழிநடத்துவதில், பாபர் அசாமிற்கு கூடுதல் சுமை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள ரஷித் லத்திஃப், “பாபர் அசாமிற்கு மனநலப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. அவர் கேப்டன் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனநிலை சரியாக வேலை செய்யாத பட்சத்தில், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது.

கேப்டன் என்ற எண்ணத்தை கைவிட்டு மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அசாம் தனது ஃபார்மை மீண்டும் கண்டுபிடிக்க அவரது கேப்டன் பதவியை விட அவரது மன நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

அதே சமயம், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி பாபர் அசாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாபர் அசாம் விரைவில் தனது ஃபார்முக்கு திரும்புவார் என்றும், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மை மீட்டெடுப்பதற்கான தன்னம்பிக்கையை கொண்டவர் என்று கூறியுள்ளார். மேலும், பாபர் அசாம் உலகத்தரம் வாய்ந்த, அருமையான வீரர் என்றும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தனது திறமை மூலம் பதிலடி கொடுப்பார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow