India Women Cricket Team in Asia Cup 2024 Final : இலங்கையின் தம்புலா மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைக்கான முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. முக்கியமான ஆட்டத்தில் சொதப்புவதை வழக்கமாக கொண்ட வங்கதேசம் இந்த போட்டியிலும் சொதப்பியது.
போட்டியின் 4ஆவது பந்திலேயே தொடக்க வீராங்கனை திலரா அக்தெர் 6 ரன்களில் வெளியேறி அணியின் வீழ்ச்சியை தொடக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, இஷ்மா தன்ஜிம் 8 ரன்களிலும், முர்ஷிதா கதுன் 4 ரன்களிலும் வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் மூவரையும் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வெளியேற்றினார்.
பின்னர், வங்கதேச வீராங்கனைகள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா மட்டும் 32 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக, ஷொர்னா அக்தெர் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவருமே ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அபாரமாக ஆடிய ஸ்மிருதி வந்தனா 39 பந்துகளில் [ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள்] 55 ரன்களும், ஷாஃபாலி வர்மா 28 பந்துகளில் [2 பவுண்டரிகள்] 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 44 நிமிடங்கள் மட்டுமே பேட்டிங் செய்து இலக்கை எட்டியது. இடையில் வங்கதேசம் அணி இந்திய அணி வழங்கிய இரண்டு வாய்ப்புகளை வீணடித்தது.
3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரேணுகா சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில், வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 5 முறை தகுதி பெற்றுள்ளது. இதில், 2012, 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. 2018ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்தது.