கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... கடைசி போட்டி சேப்பாக்கில் தான்... மவுனம் கலைத்த சி.எஸ்.கே நிர்வாகம்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி உலா வரும் நிலையில், தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனி விளையாட விரும்பும் வரை எப்போதும் சிஎஸ்கேவின் கதவுகள் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே என்றால் முதலில் நினைவிற்கு வருவது தோனி தான். தோனி இல்லையென்றால் சிஎஸ்கே இல்லை என்றும் சொல்லலாம். ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வந்தார். 2022 ஆம் ஆண்டு, சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்றதால், பேட்டிங்கில் சொதப்பிய ஜடேஜா மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் கொடுத்தார். 2023 ஆம் ஆண்டு தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. கடந்த சீசனில், ருத்துராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜடேஜா மற்றும் ருத்துராஜ் இருவருக்கும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட போதும் சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்புகளை தெரிவிக்காமல் முழுமனதோடு இருவரையும் கேப்டனாக ஏற்றனர். தோனி அணியில் கேப்டனாக இருந்த போதும் சரி, வீரராக விளையாடும் போதும் சரி, தோனிக்கு ரசிகர்களிடத்தில் எப்போதும் தனி மரியாதை இருக்கும்.
நடந்து முடிந்த 2 சீசன் ஐபிஎல் போட்டிகளும் தோனிக்கு கடைசி சீசன் பேச்சுக்கள் எழுந்த நிலையில், இதுவரையிலும் தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனியார் நிகழ்ச்சி ஒன்றில், இந்த சீசனில் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு, ஐசிசி தங்களுடையை விதியை தளர்த்தி விட்டார்கள் என்று கூறினார். தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி அன்கேப்ட் ப்ளேயராக தக்கவைக்கப்பட்டார். இதனால் தோனி இந்த சீசனில் விளையாடுவது கிட்டதட்ட உறுதியானதில், ரசிகரகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
சிஎஸ்கே அணியின் சிஇஓ தோனியின் ஓய்வு குறித்து மவுனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தோனி ஓய்வு குறித்து யாரிடமும் எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள் எல்லா எண்ணங்களையும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். அதுபோலதான் தோனியும். ஆனால், முடிவெடுக்கும் நேரத்தில் தோனி அதை பொதுவெளியில் கூறுவார் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
தோனி அவருடைய கடைசி போட்டி சென்னையில் தான் என்று ஏற்கனவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ள நிலையில், முடிந்தவரை அவர் விளையாடவே விரும்புகிறோம். தோனி விளையாட விரும்பும் வரை, சிஎஸ்கே அணியின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். எனக்கு தோனியை பற்றி நன்றாக தெரியும், அவருடைய அர்ப்பணிப்பைப் பார்த்து, அவர் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். தோனி இந்த சீசனில் விளையாட வேண்டும் என்பதற்காகவே தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்” என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் சிஇஓ தோனிக்காக கதவுகள் திறந்திருக்கும் என்று கூறியதை கேட்ட ரசிகரகள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?