HBD MS Dhoni : மகேந்திர சிங் தோனி: ஒரு தலைவன் இருந்தான்!

பொதுவாகப் பலருடைய யோசனைகளையும் கேட்பவர்தான் என்றாலும் சில சமயம் தன் உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென்று முடிவெடுத்துவிடுவார். 2007 20 ஓவர் உலகக் கோப்பையில் ஜோகீந்தரைப் பந்து வீசச் செய்தது அப்படிப்பட்ட முடிவுகளில் ஒன்று. அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த முடிவு அது.

Jul 7, 2024 - 06:37
Jul 8, 2024 - 12:49
 0
HBD MS Dhoni : மகேந்திர சிங் தோனி: ஒரு தலைவன் இருந்தான்!
தோனி பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. 350 ஒருநாள் போட்டிகள், 10,773 ரன்கள், 10 சதங்கள், 73 அரை சதங்கள் இப்படி புள்ளிவிவரங்களைக் கொண்டு மகேந்திர சிங் தோனியை அளவிட்டுவிட முடியாது.  சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இன, மொழி, எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டவர். 

நளினமான பேட்ஸ்மேன் மட்டுமே இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருக்க முடியுமென்கிற விதியை உடைத்தவர். எந்த இலக்கணத்துக்கும் உட்படாத அதிரடிகளால் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர். எதிரணிகளின் திட்டங்களைத் தவிடுபொடி ஆக்கியவர். மிக நெருக்கடியான தருணங்களிலும் அசராதவர். 

எந்தச் சூழ்நிலையிலும் தன் புன்னகையைத் தொலைத்துவிடாதவர். அவர்தான் தோனி. 2004இல் தோனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானபோது இந்திய கிரிக்கெட் அணி ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தது;  அதிரடியைக் குறைத்து; இல்லாமல் ரன் குவிக்கும் சூட்சுமத்தை சச்சின் கண்டடைந்திருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியின் ஆட்டம் சோபை இழந்துபோயிருந்தது. சச்சின், வீரேந்திர சேவாக் கொடுக்கும் வலுவான தொடக்கத்தைப் பயன்படுத்தி அணியை வெற்றிக்கு இட்டுச்செல்ல ஒரு ஃபினிஷர் இல்லாமல் அணி தவித்துக்கொண்டிருந்தது. இந்தக் கேள்விக்கான பதிலாக அமைந்தது தோனியின் வரவு.

தடந்தோள்களும் இரும்புக் கரங்களும்

எந்தவொரு இலக்கணத்துக்கும் கட்டுப்படாமல் இருந்த தோனியின்  அதிரடி பேட்டிங் ரசிகர்களைக் கட்டிப்போட்டது. தோனியைத் தொழில்நுட்ப ரீதியாக சச்சின், திராவிட் போன்றவர்களுடன் ஒப்பிட்டுக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் தனக்கென ஒரு ஸ்டைலை அவர் உருவாக்கிக்கொண்டார். அது என்ன  ஸ்டைல்? தன்னை நோக்கி வீசப்படும் எல்லாப் பந்துகளிலும் ரன் குவிக்க முடியுமா என்று பார்ப்பதுதான் அந்த ஸ்டைல். 

கால்களை உபயோகப்படுத்தாமலே நினைத்த வாக்கில் பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பும் நுட்பத்தை தோனி அறிந்திருந்தார். அதற்கேற்ற தடந்தோள்களும் இரும்புக்கைகளும் தோனிக்கு வாய்த்திருந்தன. ஐந்து, ஆறாம் நிலைகளில் களமிறங்கிய தோனி மிதவேக,  சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆடுவதில் இருந்த பலவீனமும் காலப்போக்கில் காணாமல் போனது.

தோனியின் கிரிக்கெட் அறிவைக் கண்டு வியந்த சச்சின், 2007இல் தோனியை கேப்டனாக நியமிக்கும்படி பரிந்துரைக்கிறார். இளம் துருப்புகளுடன் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி 2007 இருபது ஓவர் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. அதிரடி ஆட்டக்காரராக மட்டுமே பார்க்கப்பட்ட தோனி அப்போதுதான் ஒரு கேப்டனாக கிரிக்கெட் உலகால் திரும்பிப் பார்க்கப்பட்டார். 

குறிப்பாக பாகிஸ்தானுடனான  டை பிரேக்கரில் ஹர்பஜன், சேவாக், உத்தப்பா போன்ற சுழலர்களை வீசச் செய்ததையும் அதே பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை ஜோஹிந்தர் ஷர்மாவை வீசச் செய்ததையும் கூறலாம். கேப்டன்ஷிப்பில் முன் அனுபவமில்லாத தோனி அதையே தன்னுடைய தனித்துவமாக மாற்றிக்கொண்டார். அது அவருடைய கேப்டன்சியில் எதிரொலித்தது. எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் இருப்பதே ஒரு அனுகூலம் அல்லவா? வரலாற்றின் சுமைகள் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படலாம். அந்தச் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார் தோனி.

தந்திரம் மிகுந்த தலைவன்

குறைந்த ஓவர் போட்டிகளில் தனக்கென ஒரு வெற்றிகரமான டெம்ப்ளேட்டை தோனி உருவாக்கினார். அதற்கு இடையூறாக இருந்த சீனியர்களை முடிந்தவரை தன்வசப்படுத்தினார்.  முரண்டு பிடித்தவர்களை “ஜனநாயகபூர்வமாக” ஒடுக்கினார்.  அது என்ன ஜனநாயகபூர்வமான ஒடுக்கம்? 2007 T20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார் தோனி. 

குறிப்பாக கங்குலி, திராவிட் போன்றவர்களின் ஆட்டம் தோனிக்கு உவப்பானதாக இல்லை. ஆனால் அவர்களை நேரடியாகக் குறைகூற முடியுமா? அப்போது சச்சின் என்கிற கவசத்தை தோனி பயன்படுத்திக்கொள்கிறார். எப்படி? இந்த வயதிலும் சச்சினின் ஆட்டத்தைப் பாருங்கள் என்று பொதுவெளியில் புகழாரம் சூட்டுவதன் மூலம் மற்ற சீனியர்களுக்கு அழுத்தத்தை உண்டாக்குவது.

பின்னாட்களில் சேவாக், காம்பீர் மாதிரியான தன்னுடைய போட்டியாளர்களையும் இந்த பாணியில்தான் கையாண்டார். சீனியாரிட்டியும் திறமையும் இருந்தும் கேப்டன் பொறுப்பு கிடைக்காததால் பொறுமிக்கொண்டிருந்த யுவராஜ் சிங்கை அரவணைத்த விதமும் தோனியின் சாணக்கியத்தனத்திற்கு ஒரு சான்று. திறமையா ஒழுக்கமா என்ற கேள்வியெழுந்தபோது ஒழுக்கத்திற்கே முன்னுரிமை கொடுத்தார் தோனி. 

அதேநேரம் தனக்கு ஒத்திசைவான திறமையான வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கவும் அவர் தயங்கவில்லை. எடுத்துக்காட்டு ரோஹித் ஷர்மா. தோனிக்கு வேண்டியதெல்லாம் கட்டுப்பாடு மட்டுமே. அணியின் கலாச்சாரத்தை குலைக்கும் திறமையான ஸ்ரீஷாந்தைவிடத் தான் சொல்வதைக் கேட்கும் முனாப் படேலுக்கும் ஜோஹிந்தர் ஷர்மாவுக்குமே தோனி முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், இந்த ஃபார்முலா வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சுத்தமாகக் கைகொடுக்கவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் தோனிக்கு போதிய அனுபவம் இல்லாதததும் ஒரு காரணமெனக் கூறலாம்.

தோனி வழி தனி வழி

பொதுவாகக் கிரிக்கெட் உலகில் இரண்டு வகையான கேப்டன்கள்தான். தன்னுடைய ஆளுமையின் மூலம் அணியை முன்னகர்த்திச் செல்வது; மற்றொன்று வீரர்களை அவர்களுடைய போக்கில் விட்டு வேலை வாங்குவது. ஆனால் தோனி இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வழிமுறையைக் கையிலெடுத்தார். தோனி தன்னுடைய ஆட்டத்தின் மூலம் முன்னுதாரணமாக திகழ்ந்ததோடு மட்டுமில்லாமால் அணி வீரர்களை அவர்களுடைய இயல்பில் இருக்க அனுமதித்தார். 

கேப்டன்சியில் மைக் பியர்லி போல தனக்கென ஒரு வெற்றிகரமான மாடலை தோனி உருவாக்கியுள்ளார். வெற்றி தோல்விகளில் அணியில் உள்ள எல்லோருக்கும் பங்குள்ளது என்பது தோனியின் கேப்டன்சியில் உறுதிப்படுத்தப்பட்டது. தோனியின் கேப்டன்சியில் நட்சத்திரக் கலாச்சாரம் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்பட்டது. தோனி கேப்டனாக இருந்த காலத்தில் விராட் கோலியைப் பொதுவெளியில் ஏன் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரத் பவார்; ஜக்மோகன் டால்மியா; ஜெய் ஷா மாதிரியான அதிகார மையங்கள் தோனியை அணுக்கமாகப் பார்க்கவில்லை.  பிசிசிஐயின் அதிகாரப் படிநிலையில் கீழ் மட்டத்தில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்தான் தோனிக்குக் கைகொடுத்தார். மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு என்னும் இருண்ட மேகம் சூழ்ந்த இந்திய கிரிக்கெட்டில் நம்பிக்கைக் கீற்று ஒளிரச்செய்தவர் கங்குலி. அணி வீரர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க கங்குலி மாதிரியான ஒரு ஆளுமை மிகுந்த அதிரடியான தலைவர் தேவைப்பட்டார்.

 ஆனால் நம்பிக்கையும் வலிமையும் பெற்றுவிட்டாலும் தொடர்  வெற்றிகளைப் பெறாமல் தவித்துக்கொண்டிருந்த அணிக்குத் தோனியைப் போன்றதொரு தலைவன் தேவைப்பட்டார். புத்தாயிரத்தின் இறுதியில் வீரர்களை உளவியல் ரீதியாகக் கையாள தோனி மாதிரியான நிதானமான, நல்ல நிர்வாகி தேவைப்பட்டார். காலத்தின் தேவையை தோனி பூர்த்திசெய்தார்.

சறுக்கல்களை மீறி

ஆனால் தோனியின் கேப்டன்ஷியிலும் சர்வாதிகாரத்தின் கூறுகள் இருப்பதை நாம் பார்க்க முடியும். ஐபிஎல், உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் அணியில் அடிக்கடி மாற்றங்களைச் செய்ய மாட்டார். பொதுவாகப் பலருடைய யோசனைகளையும் கேட்பவர்தான் என்றாலும் சில சமயம் தன் உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென்று முடிவெடுத்துவிடுவார். 

2007 20 ஓவர் உலகக் கோப்பையில் ஜோகீந்தரைப் பந்து வீசச் செய்தது அப்படிப்பட்ட முடிவுகளில் ஒன்று. அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த முடிவு அது. பல சமயம் மட்டையாளர்களின் வரிசையை திடீரென்று மாற்றுவார். அது கைகொடுக்கவும் செய்யும். ஆனால், இதுபோன்ற முடிவுகள் எல்லாச் சமயத்திலும் கைகொடுப்பதில்லை. 2016 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலியைக் கடைசி ஓவரை வீசச் செய்தது அதற்கான உதாரணம். அதுவே தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

எப்படிப்பட்ட தலைமைப் பாணியிலும் பலவீனங்கள் இருக்கவே செய்யும். இந்தப் பலவீனங்களைத் தாண்டி தோனியின் சிறப்புகள் அவருடைய முத்திரைகளாக என்றென்றும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். எந்தச் சமயத்திலும் நிதானம் இழக்காதிருத்தல், தன்னைக் காட்டிலும் திறமையிலும் அனுபவத்திலும் சிறந்தவர்களைத் திறமையாகக் கையாளுதல், இளைஞர்களை ஊக்குவித்தல், அம்பயரின் முடிவுக்கு எதிராக அப்பீல் செய்யும் விஷயத்தில் காட்டும் அபாரமான கூர்மை, வெற்றி – தோல்விகளால் தடுமாறாமல் இருப்பது என அவருடைய தனித்தன்மைகளைப் பட்டியலிடலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது அவர் தந்த நம்பிக்கை. அடுத்தடுத்து விக்கெட்கள் விழும்; எடுக்க வேண்டிய ரன் விகிதமோ அதிகரித்துக்கொண்டே போகும். யாராவது ஒருவர் நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டுமே என ரசிகர்களின் மனம் பதறும். அப்படிப்பட்ட சமயங்களில் அந்தப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்து வெற்றிக் கனியைப் பறித்துத்தருவது தோனியின் சிறப்பு. அத்தகைய தருணங்களில் யாமிருக்க பயமேன் என்பதுபோலவே அவருடைய உடல் மொழி இருக்கும்.

 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது சச்சி, சேவாக், கோலி ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு யுவராஜுக்குப் பதிலாகக் களமிறங்கினார். மட்டையை ஏந்தியபடி படிகளில் அவர் இறங்கி வரும் காட்சியைப் பார்க்கும்போது அவர் முகமும் உடலும் சொன்ன சேதி இதுதான்: “நான் பார்த்துக்கொள்கிறேன்.” பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.இன்னும் ஐந்து பந்துகளில் ஆறு ரன் அடிக்க வேண்டும் என்னும் நிலையில் ஒற்றை ரன் அடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அதை எடுக்க மாட்டார். 

கடைசித் தருணத்தில் அந்தப் பக்கம் போய் நின்றுகொண்டு ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காத விஷயம். ஒரு ரன் எடுக்க ஓடிவரும் தனது கூட்டாளியைக் கையமர்த்திவிட்டு அமைதியான முகத்துடன் அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராவார். அவரது மட்டையிலிருந்து பவுண்டரியோ, சிக்சரோ பறக்கும். அந்த அமைதிக்குப் பின்னால் இருந்த தன்னம்பிக்கையும் திறமையும் அந்த ஷாட்டில் பளிச்சிடும். ரசிகர்களும் சக வீரர்களும் ஆனந்தக் கூத்தாடுவார்கள். தோனியின் முகத்தில் எப்போதும்போல வசீகரப் புன்னகை மட்டுமே மலரும். அதுதான் தோனி. அதுதான் அவருடைய முத்திரை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow