வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Sep 19, 2024 - 07:38
Sep 19, 2024 - 08:44
 0
வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?
சென்னையில் நடைபெறுகிறது இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னையில், இன்றிரவு முதல் மழைபெய்து வருவதால், ஆட்டம் தடைபட்டுவிடுமோ என்று ரசிகர்களும், வீரர்களும் சந்தேகத்தில் உள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில் இரவு பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்திய அணி கடைசியாக, 2024 மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இருந்தது. தொடர்ந்து டி20 உலகக்கோப்பை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்தோடு இந்திய அணி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுவரை டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, இந்திய அணி தனது சொந்த மண்ணில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 17 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று அசைக்க முடியாத அணியாக உள்ளது. மேலும், கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று, [2 போட்டியில் தோல்வி, 1 போட்டி டிரா] 68.52 சதவிகதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

அதே சமயம் வங்கதேச அணியோ, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 45.83 சதவிகத்துடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி, புள்ளிப் பட்டியலில் முன்னேறும் உத்வேகத்துடன் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசியிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “எந்த அணியுடன் விளையாடினாலும், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் மற்றவர்களின் திறமையை மதிப்போம். களத்தில் இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள் தான். யார் சிறப்பாக வியூகங்களை கட்டமைக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

அதே சமயம் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூறும்போது, “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடினோம், ஆனால், அது நடந்து முடிந்துவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது, ஆனால் புதிய தொடரை விளையாட நாங்கள் இங்கு வந்துள்ளோம், நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று ஓய்வறையில் நம்பிக்கையோடு இருக்கிறோம். நாங்கள் முடிவைப் பற்றி சிந்திக்கவில்லை, எங்களது ஆட்ட முறையை பின்பற்ற விரும்புகிறோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow