ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரிட்சை
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீக் போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல பி பிரிவில் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்ட நிலையில், மீதமுள்ள ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதுவரை 2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 3ம் இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி, இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக கை விடப்பட்டாலோ சுலபமாக அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒரு வேளை தோல்வியடைந்தால், இங்கிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்தினால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதுபோலவே, ஆப்கானிஸ்தான் அணி இன்று வெற்றிப்பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும், ஒருவேளை தோல்வியடைந்தால் லீக் சுற்றோடு போட்டியிலிருந்து வெளியேறிவிடும். இன்றைய போட்டி அரையிறுதிக்கு எந்த அணி தகுதி பெறும் என்பதை தீர்மானிக்கும் வாழ்வா சாவா போட்டியாக இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?






