என்ன தான் ஆச்சு பாகிஸ்தானுக்கு?.. இப்படி மோசமான சாதனையை படைப்பதா?
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனைகளை படைத்தது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, அந்த அணிக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட், ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அட்டகாசமாக பந்துவீசிய வங்கதேச பந்துவீச்சாளர் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய வங்கதேசம் அணி தனது முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய லிட்டன் தான் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார். மேலும், 138 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து, 12 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
சல்மான் அகா-வின் 47 ரன்களாலும், மொஹமது ரிஸ்வானின் 43 ரன்களாலும் பாகிஸ்தான், 172 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் எளிதாக வெற்றிபெற்றது. 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
என்ன ஆச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு:
இதனால், வங்கதேசம் அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. அதே சமயம் இந்த டெஸ்ட் தோல்வி மூலம் பல மோசமான சாதனைகளை படைத்தது.
சேசிங்கில் 3ஆவது அதிகப்பட்ச ரன்களை வங்கதேசம் பதிவு செய்தது. இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 215 ரன்களையும், 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 191 ரன்களையும் வெற்றிகரமாக இலக்கை துரத்தி பிடித்திருந்தது.
உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல், தொடர்ந்து 10 தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. 1969இல் இருந்து 1975 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 11 தோல்விகளை சந்தித்து இருந்தது.
கடந்த 25 ஆண்டுகளில் இதேபோன்று இரண்டு அணிகள் மட்டுமே இத்தகைய மோசமான சாதனையை படைத்திருந்தது. ஜிம்பாப்வே அணி 2013ஆம் ஆண்டுவரை சொந்த மண்ணில் தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதேபோல், வங்கதேசம் அணி 2005 முதல் 2013ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 27 டெஸ்ட் போட்டிகளை இழந்துள்ளது.
பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில், இரண்டாவது முறையாக தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதற்கு முன்னதாக, 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
அதேபோல், தனது சொந்த மண்ணில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகித்த பின், டெஸ்ட் போட்டியில் நான்காவது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டு, கராச்சியில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான போட்டியில், 17 ரன்கள் முன்னிலை வகித்திருந்த நிலையில் தோல்வியை தழுவியது.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், முதன்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்துள்ளது. அதேபோல, வேகப்பந்து வீச்சாளர்கள் அதிவேகமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முந்தைய சாதனையை சமன் செய்துள்ளனர்.
ஷான் மசூத் தலைமையில் ஆடியுள்ள முதல் 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் படைத்த மோசமாக சாதனையாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 8 கேப்டன்கள் இத்தகைய மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக வங்கதேச கேப்டன்கள் கலீல் மசூத் (12), கலீல் மசூத் (9), மொஹமது அஷ்ரஃபுல் (8), நைமுர் ரஹ்மான் (5), ஜிம்பாப்வே கேப்டன் கிரீம் கிரிமர் (6), நியூசிலாந்து கேப்டன் கென் ரூதர்ஃபோர்ட் (5), வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரைக் பிராத்வெய்ட் (5) இந்த மோசமான சாதனையை படைந்திருந்தனர்.
What's Your Reaction?