சுப்மன் கில், ரிஷப் பண்ட் தயார்.. தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசித்துள்ளது. இதுவரை நியூசிலாந்து 3 முறை மட்டுமே இந்திய மண்ணில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1969ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டிலும், 1988ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் கழுத்தில் ஏற்பட்ட அசௌகர்யத்தால் களமிறங்கவில்லை. சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில், சுப்மன் கில் சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின்போது டெவன் கான்வே பந்துவீச்சை எதிர்கொள்கையில் காயம் ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் பேட்டிங் மட்டுமே செய்தார். விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை. அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இதனிடையே, நாளை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கூறியுள்ள இந்திய அணி பயிற்சியாளர் ரியான் டோச்செட், ‘ரிஷன் பண்ட் நன்றாக தேறியுள்ளார். முழங்காலின் லேசான அசௌகரியம் ஏற்பட்டு இருந்தது. ஆனாலும், 2ஆவது டெஸ்டில் சிறப்பாக செயல்படுவார்’ என்றார்.
ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அணிக்கு திரும்புவதால், இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரித்துள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளதால், அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர்களின் உதவும் எனவும் கருதுகின்றனர்.
What's Your Reaction?