யூரோ கோப்பை காலிறுதியில் அசத்திய ஸ்பெயின், பிரான்ஸ்... பரிதாபமாக வெளியேறிய ஜெர்மனி, போர்ச்சுக்கல்
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் அபாரமாக ஆடி அரையிறுதிக்குள் நுழைந்தன. சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய ஜெர்மனி அணியும், ரொனோல்டா தலைமையில் விளையாடிய போர்ச்சுக்கல் அணியும் பரிதாபமாக தோற்று வெளியேறின.
ஸ்டட்கார்ட்: 2024ம் ஆண்டுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் காலிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய ஜெர்மனி அணி, ஸ்பெயினை எளிதாக வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். அதேபோல் மிகத் துல்லியமாக பந்தை பாஸ் செய்து கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஸ்பெயின் அணியின் பாஸ் 86 சதவீதமும், ஜெர்மனி அணியின் பாஸ் 84 சதவீதமும் துல்லியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி அணிக்கு அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த வாய்ப்புகளை ஸ்பெயின் கோல் கீப்பர் உனை சைமன் அவைகளை அற்புதமாக முறியடித்தார். அதேபோல் ஸ்பெயின் வீரர்களின் தாக்குதலை ஜெர்மனி பின்கள வீரர்கள் அட்டகாசமாக தடுத்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியாமல் திணறின. இரண்டாவது பாதியில் 51 நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டானி ஓல்மோ கோல் அடித்து ஜெர்மன் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். ஸ்பெயின் அணி வீரரான யமல் என்ற 16வது சிறுவன் கொடுத்த பேரற்புதமான பாஸ், டானி ஓல்மோவின் கால்களுக்குச் செல்ல, அதனை அவர் கோலாக மாற்றினார். இதற்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி அணி வீரர்கள் கடுமையாக போராட, அதற்கும் பலன் கிடைத்தது.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, 89வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் புளோரியன் விர்ட்ஸ் கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுமே 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. இதனையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது, அப்போது ஜெர்மனிக்கு கிடைத்த வாய்ப்புகளை அந்த அணி வீரர்கள் வீணடிக்க, ஸ்பெயின் வீரர்கள் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். ஆனாலும் ஜெர்மனி வீரர்களின் தாக்குதலை பார்த்தபோது அந்த அணியே கண்டிப்பாக வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் முடியவிருந்த கடைசி நேரத்தில், அதாவது 119வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒரு கோல் அடித்து ஜெர்மனியின் சாம்பியன் கனவை தவிடுபொடியாக்கினார்.
ஜெர்மனி வீரர்கள் மட்டுமின்றி அந்நாட்டு ரசிகர்களும் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போயினர். எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்ட 3 நிமிடங்களில் ஜெர்மனி அணி போராடி பார்த்தும் பதில் கோல் திருப்ப முடியாமல் யூரோ கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இப்போட்டியில் 13 மஞ்சள் அட்டைகளும், ஒரு சிவப்பு அட்டையும் வழங்கப்பட்டன. அதிக மஞ்சள் அட்டை வழங்கப்பட்ட மோசமான ஆட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியோடு ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரர் டோனி க்ராஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியும், எம்பாப்பே தலைமையின் கீழ் பிரான்ஸ் அணியும் மோதின. கிளப் போட்டிகளில் அசுரனாக வலம் வரும் ரொனால்டோ, இதுவரை தனது தேசிய அணிக்காக முக்கியத்துவம் வாய்ந்த கோப்பைகளை வென்று கொடுத்தது கிடையாது. உலகக் கோப்பை முதல் பல முக்கியமான தொடர்களில் அவர் முத்திரை பதிப்பார் என போர்ச்சுக்கல் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கான நல்வாய்ப்பாக இந்தாண்டு யூரோ கோப்பை தொடர் அமையுமா எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், இன்னொரு பக்கம் இளம் வீரரான எம்பாம்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும் தாறுமாறான சம்பவம் செய்யும் முயற்சியில் களமிறங்கியது. ஜெர்மனி – ஸ்பெயின் போட்டியை போலவே, பிரான்ஸ் – போர்ச்சுக்கல் மோதிய காலிறுதி ஆட்டமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. எல்லா விதங்களிலும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள், இறுதிவரை கோல் அடிக்கவே இல்லை. முதல் 90 நிமிடங்களில் முடிவு கிடைக்காமல் போனதால், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், போர்ச்சுக்கல் அணி 3 கோல்கள் மட்டுமே அடிக்க, பிரான்ஸ் 5 வாய்ப்புகளிலும் கோல் அடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. இதனால் ஜெர்மனியை தொடர்ந்து போர்ச்சுக்கலும் இத்தொடரில் இருந்து வெளியேறியது.
முதல் 10ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. அதேபோல், இன்று நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டிகளில், இங்கிலாந்து – சுவிட்சர்லாந்து அணிகளும், மற்றொரு ஆட்டத்தில் துருக்கி – நெதர்லாந்து அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டிகள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.
What's Your Reaction?