அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Jul 6, 2024 - 22:26
Jul 6, 2024 - 23:48
 0
அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்
Sandeep Rai Rathore About BSP Armstrong

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

இதற்கிடையே இக்கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் அண்ணா நகர் துணை ஆணையர் முன்பு சரணடைந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து போலீஸார் கைதான பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, அவரது கூட்டாளிகள் ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், செல்வராஜ், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் பிரேத பரிசோதனை முடிந்து உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிமனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆம்ஸ்ட்ராங் வீடு, அலுவலகம் மற்றும் பெரம்பூர் சுற்றுவட்டாரம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பெரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் கொலையான 3 மணி நேரத்தில் 8 பேரை கைது செய்துள்ளதாக கூறினார். மேலும் கைது செய்யப்பட்ட 8 பேரும் உண்மையான குற்றவாளி என்றும் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்த விதமான கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல்துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை எனக் கூறினார். மேலும் தேர்தலின் போது ஆம்ஸ்ட்ராங் தனது கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவரது கைத்துப்பாக்கி அவரிடமே திருப்பி வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருத்ததாகவும், அவை அனைத்திலும் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டதாகவும் தெரிவித்த அவர், கைதான நபர்களில் அருளை தவிர அனைவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவிர, ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலைக்கான உண்மையான காரணம் என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow