1521 கோடி.. 1222 வழக்கு.. பதிவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு, ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகளில் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 760 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிச்சை பாத்திரத்துடன் நிற்கச் செய்வதா?
அதன்பின் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த 2024ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலத்தை கையகப்படுத்திய பின் இழப்பீட்டுக்காக உரிமையாளர்கள் பிச்சை பாத்திரத்துடன் நிற்கச் செய்து விட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இழப்பீடு உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசார்ணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 1521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தார். இதேபோல புதுச்சேரியில் 35 கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 59 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பெருந்தொகை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளதால், இதற்கு தீர்வு காண அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்
What's Your Reaction?






