விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தான் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாகவும் முறையாக பரிசீலிக்காமல் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும், இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதால் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தார்.
இதனிடையே,தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அன்னியூர் சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜி.கே.இளந்திரையன், அன்னியூர் சிவாவின் மனுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.