தமிழ்நாடு

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!
குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு கரடி சாலையில் நடமாடியது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஊரக வனத்துறை பிரிவினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் அந்த கூண்டை கண்காணித்து வரும் நிலையில் இன்னும் அந்த கரடி கூண்டில் சிக்கவில்லை.

இதனால் விவசாயிகள் மற்றும் பெண்கள் வயலுக்கு செல்லவே அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை நாங்குநேரி அடுத்துள்ள இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பெண் அருகில் உள்ள கல்வெட்டான் குழியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு உலவி கொண்டிருந்த கரடி பெண்ணைப் பார்த்து உருமியுள்ளது. இதனையடுத்து கரடி துரத்த முயன்றதால் அங்கிருந்து தப்பி ஓடி ஊருக்குள் சென்றுள்ளார் அந்தப் பெண்.

சம்பவத்தினைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு ஊர் மக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் நேரில் வருகைத் தந்து கரடியை கண்டறியும் பணியினை துரிதப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த கரடி ஆங்காங்கே புதர்களில் மறைந்திருந்து அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன்பு அந்த கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read more: வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..