ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய பலே காவலர்.. வெளியான திடுகிடும் தகவல்
காவலர் செல்லதுரை பல பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய நிலையில் அவரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மைலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் செல்லதுரை. இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வடபழனியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். செல்லதுரை அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்லதுரை அந்த பெண்ணிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 3 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து, செல்லதுரை மீண்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், காவலர் செல்லதுரையிடம் கொடுத்த பணம், நகையை கேட்ட போது அதனை திரும்பி தரமுடியாது என கூறிய செல்லதுரை அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், செல்லதுரை வசிக்கும் வடபழனி காவலர் குடியிருப்புக்கு சென்று பணத்தை கேட்டபோது செல்லதுரை மனைவி செல்விக்கும்- அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து செல்வி தன்னையும் தன் மகளையும் தாக்கியதாக அப்பெண் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதேபோல், தன்னிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக காவலர் செல்லதுரை மற்றும் தன்னை தாக்கிய அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடபழனி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். போலீசார் இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இளம்பெண்ணிடம் தகாத உறவில் இருந்ததுடன் அவரிடம் இருந்து பணம் , நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட காவலர் செல்லதுரையை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மைலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
காவலர் செல்லதுரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது சக பெண் காவலர் ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் , நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டு அதன் பிறகு கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி காவலர் செல்லதுரை, மணலி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போது சக பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நிலையில் அப்பெண் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?