துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவரும், அந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தங்களை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக சில ஊழியர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த தடையை நீக்க கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஆரம்ப நிலையிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியவில்லை என அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்குமார் குறிப்பிட்டார். தொடர்ந்து விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் புலன் விசாரணையை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்ககு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்று அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை 28ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?