மின்னஞ்சல் தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்.. திணறும் போலீசார்.. என்ன விஷயம்?
தமிழ்நாட்டில் ஒருபக்கம் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், நட்சத்திர விடுதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
அதுவும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மேற்கண்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்குகளை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 35க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அனைத்தும் காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரிலும், அவர்களது குடும்பத்தினர் பெயரிலும், அரசியல் தலைவர்கள் பெயரிலும் வந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள தனியார் ஏஜென்சிகள் மூலம் விசாரணை ஒருங்கிணைக்கப்பட்டது.
மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டலுக்கு பயன்படுத்தப்படும் துணை மின்னஞ்சல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைச் சார்ந்தது என அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் மைக்ரோசாப்ட் மின்னஞ்சல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சைபர் கிரைம் போலீசார், மின்னஞ்சல்களின் தரவுகளை கேட்டுள்ளனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் மின்னஞ்சல்களின் தரவுகளை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சைபர் கிரைம் போலீசார், இன்டர்போல் அதிகாரிகள் உதவியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மின்னஞ்சல்களின் தரவுகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தரவுகளை தர மறுத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் தரவுகளை பெறுவதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர்களில் வெடிகுண்டு மிரட்டல் வருவதால் அவர்களை நன்கு தெரிந்து வைத்துள்ள நபர்கள் தான் இத்தகைய மிரட்டல்களை விடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒருபக்கம் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?