Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. முதல் நாளில் 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் ..!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் வேட்புமனுத்தாக்கலின் போது, 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இவரும் கடந்த ஆண்டு (2024) இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்பாளருடன் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலில் முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
சேலம் தேர்தல் மன்னன் என்கின்ற பத்மராஜன், கோவையைச் சேர்ந்த நூர் முகமது மற்றும் கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகர் உட்பட 3 பேர் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாள் என்பதால் மீண்டும் ஜனவரி 13 ஆம் தேதி மீண்டும் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?