Chennai Rain: அதிகாலையில் சென்னையை குளிர்வித்த மழை.. இன்று எங்கெங்கு மழை பெய்யும்?
வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி சென்னையில் நள்ளிரவு பல இடங்களில் மிதமான மழை கொட்டியது. இன்று அதிகாலையிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது. புரசைவாக்கம், எழும்பூர், சென்டிரல், சேத்துப்பட்டு, ராயபுரம், ஓட்டேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழையும் கொட்டியது.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அன்னவாசல், குடுமியான்மலை, ஆலங்குடி, பெருங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் மேற்கூரைகள் சேதம் அடைந்து பயணிகள் அமரும் இடத்தில் மழை நீர் அருவி போல கொட்டியது.
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திம்மாவரம், ஆத்தூர், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல இடங்களில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூர், இலுப்பையூரணி, இனாம் மணியாச்சி, மந்திதோப்பு ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள தென்காசி, தேனி மற்றும் கோவையின் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?