ஏழைகளின் ஜேசுதாஸ்.. பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய அளவில் பிரபல பின்னணி பாடகராக அறியப்பட்டவர் ஜெயச்சந்திரன். கேரள மாநிலம் எர்ணா குளத்தில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில், மூன்று முடிச்சு, வைதேகி காத்திருந்தால், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, அந்தி நேர தென்றல் காற்று உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையில் ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ போன்ற பாடலை பாடியுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, ஐந்து முறை கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும், நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதுகளையும் வென்றுள்ளார். இவ்வாறு தனது குரல் மூலம் பல சாதனைகளை படைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜெயச்சந்திரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 80 வயதான ஜெயச்சந்திரன், கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால் கண்கள் நீர்கட்டின. ’கொடியிலே மல்லிகைப்பூ' மறக்க முடியுமா? ’தெய்வம் தந்த பூவே’காற்றில் கரையுமா? ’என்மேல்விழுந்த மழைத்துளியே’ மண்ணில் மறைந்துபோகுமா? எத்துணை எத்துணை பாடல்கள் அத்துணையும் முத்துக்கள். பழக இனியவர்; பண்பாளர், அவரை நான் ஏழைகளின் ஜேசுதாஸ் என்பேன். அவர் உடல் மறைந்தாலும் குரல் மறையாது. ’இன்று எழுதிய என்கவியே இனிமேல் உன்னை எவர் இசைப்பார்’ கனத்த மனத்தோடு அஞ்சலியும் ஆழ்ந்த இரங்கலும் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?