சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு, வைபவ், அஜ்மல், லைலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி, பிரம்மாண்டமான பட்ஜெட் என கோட் படத்துக்கு ஆரம்பம் முதலே ஹைப் இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 5ம் தேதி ரிலீஸான கோட் படத்துக்கு முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தன. சென்னை 28, மங்காத்தா, மாநாடு என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, கோட் மூவியில் விஜய் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என சொல்லப்பட்டது. கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவை சுமார் ரகம் தான் என விஜய் ரசிகர்களே கூறியிருந்தனர். முக்கியமாக விஜய்யின் டீ-ஏஜிங் லுக், பாராட்டையும் பெற்றது, ட்ரோல்களுக்கும் உள்ளானது. மேலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் நெட்டிசன்களால் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் லுக்கும் ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. இப்படி படம் முழுக்க பல நெகட்டிவ் அம்சங்கள் இருந்தால் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் நாளில் மட்டும் 126 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்த கோட், அதன்பின்னர் வசூலில் தடுமாறத் தொடங்கியது. இதனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே கோட் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தது படக்குழு. அதன்படி, அக்.3ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கோட், ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஓடிடியில் வெளியான பின்னரும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது விஜய்யின் கோட். அதன்படி இந்தப் படம் உலகம் முழுக்க 455 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லியோவுக்குப் பின்னர் அதிகம் வசூலித்த விஜய்யின் படம் என்றால், அது கோட் தான் என சொல்லப்படுகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ, 600 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இப்போது கோட் 455 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது.
கோட் படத்தின் பட்ஜெட் 300 கோடிக்கும் அதிகம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தன. அதன்படி பார்க்கும் போது கோட் வசூல் 455 கோடி என படக்குழு அறிவித்துள்ளது, விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. அதேநேரம் முதலில் லியோ படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என சொல்லப்பட்டது. அதன்பின்னர் கோட் ஆயிரம் கோடி கலெக்ஷன் செய்யும் என ரசிகர்கள் அடித்துக் கூறினர். ஆனால், கோட் அதிகபட்சம் 500 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Creating new records at the Box office #GOAT @actorvijay Sir @vp_offl @aishkalpathi @Ags_production @Jagadishbliss pic.twitter.com/AEJVtAF57s
— Archana Kalpathi (@archanakalpathi) October 9, 2024