பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன 10) சட்டப்பேரவை கூட்டத்தொரில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக , பெண்கள் அதிக சமூக பங்களிப்பு அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணையின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கி தருவதிலும் இந்த அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு.
86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்கமுடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
இந்த வகையில் BNS சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக BNS மற்றும் BNSS சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், என்று பேசினார்.
சட்டதிருத்த மசோதா:
பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, காவல் துறை ஊழியர் மற்றும் அவரது நெறுங்கிய உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்தால் 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, 12 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு மரண தண்டனையும் , மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழக்க சட்டத்திருந்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?