அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

Jan 1, 2025 - 10:12
Jan 1, 2025 - 10:18
 0
அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு  சிறப்பு வழிபாடு..!
அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோவிலின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பெரியநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து பக்தர்கள் நள்ளிரவிலிருந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

முன்னதாக நள்ளிரவு முதலே ராஜகோபுரம் முன்பு குவிந்த  பக்தர்கள் கைகுழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக புத்தாண்டை முன்னிட்டு தரிசனம் செய்ய காத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம், மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

வழக்கமாக  அண்ணாமலையார் திருக்கோவிலில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மட்டுமில்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வரும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாநில பக்தர்களும்  அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவு வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow