விண்ணைப் பிழந்த அரோகரா கோஷம்.. பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானுக்குரிய மிக முக்கிய விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மாதம் தோறும் சஷ்டி திதி வருவதுண்டு. ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதி சிறப்புடையது. பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திபெற்ற அழகர்மலை உச்சியில், முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாதம் நடைபெறக்கூடிய சஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.
இதனைத்தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது. சஷ்டி விழாவின் முதல் நாளில் முருக பெருமான் அன்னவாகனத்திலும், இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாளான நேற்று முருகபெருமான் சமேதராக சப்பர வாகனத்தில் புறப்பாடு திருக்கோயிலில் உள்ள மண்டபத்தை சுற்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று (நவ. 07), ஆறாவது நாள் விழாவாக காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகன் பெருமான் புறப்பாடு நடைபெற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும், கூடியிருந்த திரளான பக்தர்களின் "அரோகரா கோஷமும், வெற்றிவேல் வீரவேல்” கோஷமும் விண்ணை பிளந்தது. மேலும் இந்த சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோயிலுக்கு திரும்பிய சுவாமியை கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. நாளை (நவ. 08) ஏழாவது நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. இந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?