அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயில் தைலக்காப்பு உற்சவம் கோலாகலம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவியில் தைலக்காப்பு உற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மிகவும் பிரசித்திப் பெற்ற மற்றும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பல்வேறு உற்சவ விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக சொல்லப்போனால், சித்திரை மாதத்தில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடி மாதத்தில் திருக்கோவிலில் நடைபெறும் திருத் தேரோட்டமும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக, ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை ‘தைலக்காப்பு உற்சவம்’ மிகக் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், ஸ்ரீகள்ளழகர் என்றழைக்கப்படும் சுந்தரராச பெருமாள், சடைமுடி கொண்டையுடன், மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தத்திற்கு சென்று தலைக்காப்பு சாற்றி, நீராடுவார். இதற்காக மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவ விழா, கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து முதல் நாள் நிகழ்ச்சியாக நவநீத கிருஷ்ணன் மண்டபத்தில் ஶ்ரீகள்ளழகர் எழுந்தருளி வைகுண்ட சேவையாக பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மறுநாள் (நவ. 12), இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக பரமபத சேவையாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தைலக்காப்பு உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று (நவ. 13) மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை உற்சவரான மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சடைமுடி கொண்டையுடன், மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்த தொட்டிக்கு, திருக்கோவில் ஆஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன், பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகருக்கு மலையில் வழியில் உள்ள, ஶ்ரீஅனுமார் தீர்த்தம் மற்றும் ஶ்ரீகருடன் தீர்த்தத்தில் தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து, 11.30 மணியளவில் தைலக்காப்பு உற்சவத்திற்காக நூபுரகங்கை தீர்த்தம் அருகேயுள்ள, மலர்கள் மற்றும் பழங்களால் மாதவி மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு தாழம்பூ சூடி சடைமுடியுடன் எழுந்தருப்பட்ட ஶ்ரீகள்ளழகர் என்ற சுந்தரராச பெருமாளுக்கு, எட்டு வகையான வாசனை மற்றும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் கொண்டு, திருக்கோவில் ஆஸ்தான பட்டரான அம்பிப்பட்டர் தலைமையில் தைலக்காப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது, பெருமாள் சடைமுடிக்கு தைலம் தேய்த்து, சீப்பு மற்றும் கண்ணாடிக் கொண்டு தலை வாரி அழகுப்படுத்துவது போலவும், வெற்றிலை மற்றும் பாக்கு வைத்து தாம்பூலம் தரித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதன் பின்பு, நூபுரகங்கை தீர்த்த தொட்டியில், சடைமுடியுடன் நின்ற கோலத்தில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீகள்ளழகரை அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாதவி மண்டபத்தில் எழுந்தருளிய ஶ்ரீகள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், மாலையில் தீர்த்த தொட்டியில் இருந்து தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் தனது ஆஸ்தானம் நோக்கி புறப்பாடு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
What's Your Reaction?